Friday 19 June 2020

இலங்கையில் தெலுங்கு மக்கள்

இலங்கையில் தெலுங்கு மக்கள் ஆரம்ப காலத்திலிருந்தே பல பகுதிகளிலும் வாழ்ந்து வந்துள்ளனர். விஜயநகரத்து சாம்ராஜ்ஜியத்தின் செல்வாக்கினால் இலங்கையிலும் செல்வாக்குப் பெற்று விளங்கியுள்ளனர். 1707 தொடக்கம் 1815க்கும் இடையில் நரேந்திர
சிங்கன்,  ஸ்ரீ விஜயராஜசிங்கன், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன், இலங்கையை ஆண்ட கடைசி மன்னனான ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் போன்ற மன்னர்கள் ஆந்திரா பெண்களை வரவழைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மன்னன் விஜயமானன்நாயக்கரின் இரண்டு புதல்வியரை கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் மணந்துள்ளார்.




பாம்பாட்டும் தெலுங்குக் குறவர்கள் 1900களில் 


 1803 ஆம் ஆண்டு கவர்னர் பிரெடரிக் நோர்த் அவர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தென்னிந்தியர்களின் அருந்ததியர் சமூகத்தினரும் அடங்குவர். ஆரம்பகாலகட்டங்களில் தெலுங்கர்களும் மலைநாட்டின் பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். கொங்குநாட்டுப் பகுதிகளில் இருந்து வந்த சிலர் மலையக நகரங்களில் வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு பிரதான வீதியில் ரஞ்சனாஸ்,  கணேஷ் துணியகம் போன்ற பல நிறுவனங்கள் மிக வெற்றிகரமாக இப்போதும் இயங்கி வருகின்றன.



தெலுங்குக் குடும்பம் ஒன்று 




துறைமுகம்,  ரயில்வே,  நகர சுத்திகரிப்பு தொழில்,  சீவல்த் தொழில், மட்பாண்டத் தொழில், தையல் தொழில், சவரத் தொழில்,  சலவைத் தொழில்,  வீட்டுவேலை முதலிய தொழில்களில் இவர்கள் ஈடுபட்டு வந்தார்கள். ஆயிரக்கணக்கானோர் தொழில்களில் இன்றும் ஈடுபட்டு வருகின்றார்கள். இப்பிரிவினரை தோட்டம் சாராத வகுப்பிற்குள் அடக்க முடியும். 1922ஆம் ஆண்டு தெலுங்கர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சம் ஆகும்.



சவரத்தொழில் செய்யும் இலங்கை வாழ் தெலுங்கு வயோதிபர்



 இலங்கையின் பிரதான நகரங்களில் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களாக சேவைகளில் ஈடுபடும் அருந்ததியர் என்னும் சமூகத்தினர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்களுடைய மரபும் கலாச்சார பண்பாட்டு வரலாறும் தென்னிந்தியத் தமிழர்கள் போன்ற தோற்றத்தையுடையதாக இருந்தபோதிலும் இவர்களது தாய்மொழி தெலுங்கு ஆகும். இப்போது ஆந்திராவில் பேசப்படுகின்ற தெலுங்கு மொழியை விட ஒருவகை வட்டாரப் பேச்சு வடிவமாகவும் இருந்துள்ளது இந்த மக்கள் பெரும்பாலும் இன்று தமிழ் மொழியிலேயே பேசுகின்றார்கள். இருப்பினும் மற்றவர்களுக்குப் புரியாதவாறு தமக்குள் சிலவேளைகளில் தெலுங்கு மொழியில் பேசுவார்கள்.






தெலுங்குக் குடும்பம் ஒன்று 







 அருந்ததியர்களில் தெலுங்கு பேசுபவர்கள், கன்னடம் பேசுபவர்கள் என இரண்டு பிரிவினர் உள்ளனர். மற்றையவர்கள் ஏனைய மொழி பேசும் மக்களோடு கலந்து உள்ளனர். போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் முதலாவதாக தெலுங்கு பேசுபவர்கள் வந்துள்ளார்கள். ஆந்திராவின் பல பகுதிகளிலிருந்தும் பல காலகட்டங்களில் பல காரணங்களுக்காக தெலுங்கர்கள் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து பின்னர் சிறு சிறு குழுக்களாக இலங்கை வந்துள்ளனர்.




இலங்கை வாழ் தெலுங்கு சமூகம் 




1220 தொடக்கம் 1238 வேளையில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் வெற்றி கொண்ட இரண்டாம் நரசிம்மன் காலத்திலும் , 1254 தொடக்கம் 1295 வரையான கன்னட மன்னன் ராமநாதன் காலத்திலும் கன்னடம் பேசும் அருந்ததியர்கள் தமிழகம் வந்துள்ளனர்.முகமதியர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்த போது ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆட்சி காலங்களில் பெருமளவு அருந்ததியர்கள் தமிழகத்தில் குடியேறி உள்ளனர். ஜோதிடம் மாந்திரீகம் அதிக நம்பிக்கை உள்ள இனமாகவும் அதிக தெய்வ நம்பிக்கை கொண்ட இனமாகவும் இவர்கள் உள்ளனர். தவில், நாதஸ்வரம், உறுமி,  பாம்பு ஆட்டுதல் போன்ற கலைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.





இன்றும் இவர்கள் சைவ மதத்தினையே பரவலாகப் பின்பற்றுகிறார்கள் 




 தெலுங்கு காங்கிரஸ், அகில இலங்கை தெலுங்குக் காங்கிரஸ் என்ற அமைப்புகள் மூலமாக பன்னீர்செல்வம்,  அன்பழகன் போன்றவர்கள் இந்த மக்களை ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

 சிங்களவர்கள் சிங்களத்தில் பேசும்போது மொழியில் புரியாத நிலைமை தோன்றும்போது நகைச்சுவையாக அன்டர தெமழ  என்பார்கள். இது ஆந்திர தமிழாகும். குருநாகல் மாகந்துர பெண்நிலை குளியாப்பிட்டி போன்ற பகுதிகளில் தெலுங்கு மக்கள் சில கிராமங்களில் சிங்கள மக்களோடு கலந்து சிங்கள சமூகமாக மாறி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





பாம்பாட்டி  ஒருவர் 




 பிரேமதாசா அவர்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதிகளில் தெலுங்கு மக்களின் நல உரிமைகளை முன்னெடுக்க கபினட் அமைச்சர் ஒருவர் பொறுப்பாக்கப்பட்டிருந்தார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் டிரோன் பெர்னாண்டோவும் ஒருவராவார்.

 தெலுங்கு காங்கிரஸ் தலைவர் அன்பழகன் வருடம் தோறும் தமிழ்நாடக விழாவினை நடத்தி தொண்டாற்றினார். ஸ்தல ஸ்தாபன ஊழியர்கள் இலங்கை குடியுரிமை பெற்ற பின்னர் நகரசபை மற்றும் மாநகரசபை உறுப்பினர் ஆகினர். பின்னர் இவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்துவிட்டனர். காலம் சென்றவர்களான ஊர்காவலன், பொல்காவலை முனியாண்டி ஆகியோர் கலை இலக்கிய ஈடுபாடு உடையவர்கள். முற்போக்கு சிந்தனை உடையவர்கள் ஆவர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home