Saturday 6 June 2020

சீக்கிய மதம் || சமாதானம் | சமத்துவம் | சகோதரத்துவம்


"தெய்வம் ஒன்று.தெய்வம் படைத்த அனைத்து உயிர்களும் சமத்துவமானவை.அன்பும் சகோதரத்துவமும் செளபாக்கியமும் எங்கும் நிலவவேண்டும்.சாதி இன மத பேதம் இல்லாத சமுதாயம் நிலைத்திருக்க வேண்டும்" 
-ஸ்ரீ குரு நானக்தேவ்




சீக்கிய மதத்தை உருவாக்கியவர் மகா ஞானியும் சிறந்த பாடகரும் தலைசிறந்த கவிஞருமான ஸ்ரீ குரு நானக் அவர்களே ஆவார்.சீக்கியக் குருமார்களில் முதன்மையானவரும் இவரே. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஒரு சிறிய கிராமத்தில் 1469ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி பிறந்த இவர் செப்டம்பர் மாதம் 22ம் திகதி 1539ம் ஆண்டு மறைந்தார். அவரது பிறந்த தினமானது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில் வெவ்வேறு திகதிகளில் வரும் பௌர்ணமி தினங்களில் உலக சீக்கியர்களால் மிகவும் பக்திபூர்வமாகக் கொண்டாடும். இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஸ்ரீ குரு நானக்கின் பிறந்த தினம் போது விடுமுறையாகும்.

குறிப்பாக பாபா கலு (தந்தை) மாதா தீப்தா (தாய்) ஆகியோரின் இல்லத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குர்த்வரா ஜனம் ஆச்சிரமத்தில் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.இந்த ஆச்சிரமானது ஷேகுபுராவில் ராய்போய்டிதல்வந்தி என்னும் இடத்தில் அமைந்துள்ளது.




குரு நானக்தேவ் 




குரு நானக்கின் சந்நியாசம் தெய்வீகம் மற்றும் மத அதிகார உணர்வு அவருக்குப் பின்வந்த ஒவ்வொரு குருமார்மீதும் பதிந்து நிற்கின்றது என சீக்கிய மதத்தவர்கள் நம்புகின்றார்கள்.இவரது அடுத்த குருவாக ஏற்கப்பட்டவர் குரு அங்காத் என்பவராவார்.

லாகூருக்கு அண்மையில் உள்ள ராய்போய்கித்தல்வந்தியில் பிறந்த நானக்கின் தந்தையின் பெயர் கல்யாண் சர்த்தாஸ்
பேடி.இவர் மென்தாகலு எனவும் அழைக்கப்பட்டார்.தாயாரின் பெயர் திரிப்தா.இவருக்கு 5 வயது மூத்த சகோதரி ஒருவரும் இருந்தார்.சிறுவயதிலிருந்தே ஆன்மிக நாட்டம் கொண்டவராக இருந்த நானக்கை அவரது 7வது வயதில் தந்தையார் பாடசாலையில் சேர்த்தார்.பாரசீகம் அல்லது அரேபிய மொழியில் முதலாவது எழுத்து எண் கணிதத்தில் ஒன்று போன்று குறியீட்டில் இருப்பதைக் காட்டி இது தெய்வத்தின் ஏகதன்மையைக் காட்டுவதாக சிறுவன் நானக் கூறியதைக் கேட்டு அவரது ஆசிரியர்கள் பேராச்சரியம் அடைந்தனர்.மேலும் வெய்யிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர் தலை மீது வெய்யில் படாதிருக்க நிழல் போன்று ஒரு காட்சி தென்பட்டதாகவும் மற்றுமொரு சம்பவத்தில் நச்சுப்பாம்பு ஒன்று படம் எடுத்தவாறு குடை போன்று நிழல் செய்ததாகவும் குறிப்பிடுவார்.

1475ம் ஆண்டு நானக்கின் மூத்த சகோதரி திருமணம் செய்து கணவருடன் சுல்தான்பூர் என்னும் இடத்துக்கு சென்றபோது அவருடன் கூடச் சென்று வாசித்தார் நானக்.தனது 16வது வயதில் தொழில் செய்ய ஆரம்பித்தார்.அந்தக் காலகட்டமே இவரது ஆன்மீக சிந்தனையின் வளர்ச்சிக்குரிய காலமாக அமைந்தது.







1487ல்  மாதா சுலக்கானி என்பவரைத் திருமணம் செய்த நானக்கிற்கு இரு மகன்கள் பிறந்தார்கள்.1499ம் ஆண்டில் தான் அவரது 30வது வயதில் அவருக்கு ஞானோதயம் பிறந்ததாக நம்பப்படுகிறது.உள்ளூர் நதிக்கரையில் தியானத்தில் இருந்த நானக்கை ஒருநாள்க் காணவில்லை.அவரது உடைகள் அருவிக்கரையில் காணப்பட்டன.நானக் நீரில் மூழ்கியிருக்கலாம் என எண்ணிய உள்ளூர் மக்கள் சுழியோடித் தேடினர்.உடல் கிடைக்கவில்லை.மூன்றாம் நாள் அவர் அருவிக்கரையில் மௌனமாகா அமர்ந்தநிலையில் காணப்பட்டார்.மறுநாள் வாய் திறந்தார்.

'இந்து என்றோ முஸ்லீம் என்றோ யாரும் இல்லை.அப்படியிருக்க நான் யார் வழியில் செல்வது? நான் கடவுள் வழியில் செல்வேன்.இறைவன் இந்துவோ முஸ்லிமோ அல்ல.நான் செல்லும் பாதை கடவுளின் பாதையாகும்'என்றார்.








'நான் கடவுளின் சாந்நிதிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.அங்கு அமிர்தம் நிரம்பிய பாத்திரம் ஒன்றை என்னிடம் தந்தார்கள்.இது இறைவனின் திருப்பெயரால் அவன் புகழ் பாடி அதற்கு அளிக்கப்படும் அற்புத பானம்.இத்தனை அருந்துக.நான் உன்னோடு இருப்பேன்.நான் உன்னை ஆசீர்வதித்து உயர்வளிப்பேன்.உன்னை நினைக்கும் எவரும் என் ஆசீர்வாதத்தைப் பெறுவர்.செல்க ! என் பெயரைப் புகழ்ந்து போற்றுக ! அவ்விதமே ஏனையோரும் செய்யுமாறு போதனை செய்க ! உன்மீது எண் சிறப்புக்கள் தோன்றுமாறு செய்வேன்.இது உனக்கான அழைப்பாக இருக்கட்டும் என ஆணையிட்டார்கள்' என நானக் கூறினார்.

அன்றிலிருந்து அவர் நானக்குரு என வர்ணிக்கப்பட்டார்.சீக்கிய மதம் பிறந்தது.ஸ்ரீ குரு நானக்கின் போதனைகள் கடவுள் புகழ் போற்றும் ஏராளமான பாடல்களாக சீக்கிய வேதமான குரு கிரகிந் சாகிப்பில் நிறைந்துள்ளது.









மனித ஆணவக் குணத்தை எடுத்துரைக்கும் ஸ்ரீ குரு நானக் , ' உண்மை சொரூபமான இறைவனை அவனது பெயரால் (நாம் ஜப்னா) வழிபடுங்கள் ' என போதிக்கிறார்.

ஸ்ரீ குரு நானக்கின் போதனைகளை பக்தர்கள் மூன்று வழிகளில் பின்பற்றுகிறார்கள்.ஏனையோருடன் பகிர்ந்து வாழுதல் மற்றும் ஏழைகளுக்கு இரங்குதல், உழைத்து நேர்மையாகா வாழுதல், ஐம்புலன்கள் தீய வழியில் செல்லாமல் கட்டுப்படுத்த இறைவனைத் தியானித்தல் மற்றும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்தல் என்பன அந்த வழிகளாகும்.









மனித குலத்துக்கு சமாதானம் மற்றும் கருணை என்னும் கடவுளின் செய்தியைப் பரப்பும் பொருட்டு இவர் மேற்கொண்ட 4 புனிதப் பயணங்கள் பெரிதும் பேசப்படுகின்றன.

வங்காளம் அஸாம் பிராந்தியங்கள் என கிழக்கு நோக்கியும் இலங்கை வரை தெற்கு நோக்கியும் காஷ்மீர் லாடக் என வடக்கு நோக்கியும் பாக்தாத் மக்கா மதினா என மேற்கு நோக்கியும் பல ஆயிரம் மைல்கள் இவர் மேற்கொண்ட ஆன்மீகப் பயணங்கள்  முக்கியமானவை மேலும் பங்களாதேஷ் பாகிஸ்தான் திபெத் நேபாளம் பூட்டான் எகிப்து இஸ்ரேல் ஜோர்தான் தென்மேற்கு சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் எனப் பல நாடுகளுக்கும் பயணம் செய்தார்.

தமது இந்த மகத்தான புனிதப் பயணங்களின் போது இந்து முஸ்லிம் பௌத்தம் சமணம் மற்றும் சூபிஸம் எனப் பல்வேறு மதத் தலங்களையும் மக்களையும் சந்தித்தார்.






குருத்துவாராம்

குருத்துவாராம் ( Gurdwar ) என்று சீக்கியர்களுடைய கோவில்களை அழைப்பர். இந்தியாவில் மட்டும் சுமார் 200 குருத்துவாராங்கள் உள்ளன.பாகிஸ்தானிலும் ஏராளமான குருதுவாரங்கள் உள்ளன.உலகமெங்குமுள்ள சீக்கியர்கள் தங்கள் பிரதானமான குருத்துவாராமாக பஞ்சாப்பின் 'ஹர்மந்திர் சாகிப்' எனப்படும் பொற்கோயிலையே கருதுகின்றனர். எந்தவொரு குருத்துவாரத்திலும் 'குருகி ரந்த் சாகிப்ஜி' என்ற புனித நூலின் பிரதி ஒன்று கட்டாயமாக வைக்கப்பட்டிருக்கிக்கும்.
இதில் உள்ள கீர்த்தனங்கள்  யாவும் குருநானக் தேவ்ஜியாலும் அவரது வழிவந்த ஏனைய குருமார்களாலும் நேரடியாகவே எழுதப்பட்டவை என்பர்.





பொற்கோயில் 




2005ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 23 மில்லியன் மக்கள் சீக்கிய மதத்தைச் சார்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. இன்று வாழும் மதங்களுள் சீக்கிய மதம் 5வது பெரிய மதமாகக் கருதப்படுகிறது.

இன மத உயர்வு தாழ்வு நோக்காத சீக்கிய மதம் உலக சீக்கியர்களால் இன்று பக்தி விசுவாசத்துடன் பின்பற்றப்படுகிறது.

நன்றி : லக்ஷ்மி 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home