மழுங்கடிக்கப்படுகிறதா மாணவர் சமுதாயம் ? மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பெற்றோர்களின் தவறான புரிதல்களும் || தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையும்
அண்மைக்காலமாக வடக்கு மாகாணம் கல்விநிலையில் தொடர்ந்தும் பின்தங்கி நிற்பது நாம் அனைவரும் அறிந்ததே. புத்தகக் கல்விக்கு அப்பால், ஒவ்வொரு மாணவனினதும் ஆளுமை விருத்தி மேம்பாடே முக்கியமானதாகும். மாணவர்கள் கல்விநிலையில் மாத்திரமன்றி வாழ்க்கைத்தேர்ச்சி மற்றும் தலைமைத்துவ ஆளுமை விருத்தியிலும் பின்தங்கியிருப்பத்து கவலைக்குரிய விடயமாகும். இதற்கு முக்கிய காரணியாக இருப்பது , மாணவர்களை இணைபாடவிதான செயற்பாடுகளை மேற்கொள்ளவதற்கு ஊக்கம் கொடுக்காமை காணப்படுகின்றது.
புத்தகக் கல்வியினை விட , மாணவர்களின் சுய ஆளுமை மேம்பாடு, தலைமைத்துவ விருத்தி, சமூக உறவு மற்றும் தொடர்பாடல்த் திறன் போன்றவையே முக்கியமாக விருத்திசெய்யப்பட வேண்டியவையாகும். புத்தகப் படிப்பானது ஒரு மாணவனைக் குறிப்பிட்ட தூரத்துக்கே கொண்டுசெல்லும். வாழ்க்கைத் தேர்ச்சித் திறன்களின் மூலமே ஒரு மாணவன் சமூகத்திற்கு மிகவும் பயனுடையவனாக மாற்றமடைவான்.
உயர்தரத்தில் தனக்கு விரும்பிய பாடப்பரப்பினைத் தானே சரியாத் தெரிவுசெய்து படிப்பதற்குரிய சுதந்திரத்தை அநேகமான பெற்றோர்கள் வழங்குவதில்லை. அதுமாத்திரமன்றி, ஒரு மாணவன் உயர்தரத்தில் கல்விகற்கத் தொடங்கும்போது , பாடசாலையின் இணைவிதானச் செயற்பாடுகளிலிருந்து முழுமையாகத் தன்னை ஒதுக்கிக்கொள்ளும் போக்கும் அநேகமான மாணவர்களின் காணப்படுகின்றது. மேலும் தொடர்ச்சியாக நடைபெறும் தனியார் கல்விநிலையங்களால் , சமூகத்துடன் தனது உறவை வளர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களை மாணவன் இழக்கும் நிலை காணப்படுகின்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கும் தனியார் கல்விநிலையங்களில் குறிப்பிட்ட தொகை மாணவர்களே சித்திபெறுவது நாம் அறிந்ததே.
பெற்றோர்களில் பலர் , தமது பிள்ளைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதோடும் கல்விநிலையக் கட்டணங்களை செலுத்துவதோடு மட்டுமே நின்றுவிடுகின்றனர். பெற்றோரின் எல்லைகடந்த அரவணைப்பும் , ஒரு மாணவனின் ஆளுமை வளர்ச்சியில் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடிய காரணியாகும்.
இன்றைய மாணவர் சமுதாயத்தில் உயர்தர மாணவர்கள் தமது பாடசாலையை அன்றி தனியார் கல்விநிலையங்களையே முழுமையாக நம்பியிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தனியார் கல்விநிலையங்களின் வருகையினால் , சமூக உறவினை வளர்ப்பதற்கும் , தனக்குள் மறைந்திருக்கும் தனித்துவமான திறமைகளை இனம்கண்டுகொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. தனியார் கல்விநிலையங்களில் கல்விகற்கும் மாணவர்களில் எத்தனை வீதமான மாணவர்கள் உயர்நிலைச் சித்தியினை அடைகின்றனர் என்பது தான் இங்கு கேள்வியாக உள்ளது. கிழமை நாட்களில் மாத்திரமல்லாமல் வாரவிடுமுறை நாட்களிலும் கூட தனியார் கல்விநிலையங்கள் தொடர்ந்தும் இயங்குவதால் , மாணவர்கள் உளவியல் ரீதியாக மனஉளைச்சலுக்கு உள்ளாவதை எவருமே பொருட்படுத்துவதில்லை.
இலங்கையின் கல்விமுறையானது தொழிற்கல்வியையே மையப்படுத்தியது ஆகும். இது பலவழிகளில் ஒரு தனிநபரின் ஆளுமையினை மழுங்கடிக்கும் ஒன்றாகும். ஒரு மாணவன் தனது ஆளுமையினை விருத்திசெய்வதில் எவ்வளவு பாடுபடுகிறானோ,அளவிற்கு அவனது தலைமைத்துவப் பண்பும் சுய மதிப்பீடும் விருத்தி பெறும். பல்கலைக்கழகத்தை விட்டால் வேறு வாழ்க்கை இல்லை என்னும் தவறான கண்ணோட்டமும் எம்மவர் மத்தியிலிருந்து களையப்பட வேண்டும்.மேலும் மாணவனின் சுய ஆளுமையை விருத்தி செய்து, அவரின் சுய மதிப்பீட்டை உயர்த்தி, அவருள் மறைந்திருக்கும் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர இச் சமூகம் முயற்சி செய்யும் பட்ச்சத்தில் மாணவன் தனக்கு ஏற்ற பாதையில் தனது எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home