Thursday, 2 July 2020

தமிழகப் பாறை ஓவியங்கள் || ஓர் அறிமுகம்



தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் கண்டறியப்பட்டுள்ளன. இக்கலை மரபை ஓவியங்கள் மற்றும் கற்செதுக்குகள் இரு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம். இந்தியாவில் பரவலான அனைத்து மாநிலங்களிலும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் மத்தியபிரதேச மலைக் குன்றுகளில் காணப்படுகின்றன. அது போல  தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் குறிஞ்சி மற்றும் முல்லை நிலப் பகுதிகளிலுள்ள மலைகளில் புதிய கற்காலம், பெருங்கற்காலம் மற்றும் வரலாற்றுக்கால ஓவியங்கள் காணக்கிடைகின்றது.




தமிழகத்தில் காணப்படுகின்ற பாறை ஓவியங்கள் பெரும்பாலானவை சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களாகவே உள்ளன, இருப்பினும் சில இடங்களில் கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதே போல பெரும்பாலான இடங்களில் ஓவியங்கள் ஒரே நிறத்தில் வரையப்பட்டுள்ள. செத்தவரை, கரிக்கையூர் போன்ற சில இடங்களில் மட்டுமே இரண்டு நிறத்திலும் வரையப்பட்டுள்ளன, சில ஓவியங்களில் கோட்டோவியம் ஒரு நிறத்திலும், உடல் பகுதி வேறு நிறத்திலும் இருக்கும். தமிழகத்தில் பாறை ஓவியங்களில் அதிக அளவில் வெள்ளை நிறமும் அதற்கு அடுத்த நிலையில் சிவப்பு நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொன்மையான ஓவியங்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன. இருப்பினும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.





வெள்ளை நிறம், சுண்ணாம்பு கல் அல்லது வெள்ளை களிமண் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படிகின்றது. சிவப்பு நிறம், அடர் சிவப்பு, இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு போன்ற  பல்வேறு நிலைகளில் கிடைக்கின்றது. கீழ்வாலை, செத்தவரை, அழகர் கோவில், கீழவளவு போன்ற இடங்களில் ஓவியங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. ஒரமணகுண்டா, மகாராஜாக்கடை, மல்லசந்திரம் போன்ற இடங்களில் ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளன. கரிக்கையூர், சேலகுறை, வெள்ளரிக்கோம்பை, வேட்டைகாரன்மலை(வெள்ளருக்கம்பாளையம்)  போன்ற இடங்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகின்றன. உசிலம்பட்டி, பழனி போன்ற பகுதிகளில் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஓவியங்கள் பெரும்பாலும் தனித்தனி நிறங்களால் தனித்தனியாகவே வரையப்பட்டுள்ளன. இருப்பினும் சில இடங்களில் ஒன்றன் மீது ஒன்றாக வரையப்பட்டுள்ளது. இவை காலத்தால் வேறுபட்டவையாக இருக்கும். இவை மயிலாடும்பாறை, கரிக்கையூர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

பெரும்பாலான ஓவியங்களில், மாடுகள், மான்கள், குரங்குகள், குதிரைகள், யானைகள், சண்டைக்காட்சிகள், வேட்டைக் காட்சிகள், சடங்கு மற்றும் சமூக நிகழ்வுகள் அதிகம் காணப்படுகின்றன. அது போல கணிசமான அளவில் அடையாளங்களும், குறியீடுகளும் காணப்படுகின்றன. தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் ஒரே மாதிரி தன்மையில் இல்லாமல் கலைஞர்களுக்கு தகுந்தாற் போல் கருப்பொருளைத் தேர்வு செய்வதிலும், வெளிப்பாட்டு யுத்தியிலும் தனித்துவமாகவே உள்ளன.




பெருங்கற்கால சின்னங்கள் மற்றும் பல பாறை ஓவியங்களில் உள்ள மனித உருவங்கள் பொதுவாக குச்சி வடிவில் காட்டப்பட்டுள்ளன. மனித உருவ வடிவங்களின் அடிப்படைக் கூறுகளை எளிமைப் படுத்தி கோட்டுருவமாக தேவைக்குத் தகுந்தாற் போல் மனித உருவங்கள் வரையப்பட்டு வந்துள்ளன. இக்குச்சி வடிவங்கள் கை, கால், உடல்களோடு வில், அம்பு, கேடயம் மற்றும் பிற ஆயுதங்களை தாங்கியிருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன.

வட இந்தியாவில் இது போன்ற குச்சி வடிவ மனித உருவங்கள் Mesolithic period ஆக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதே சமயம் தமிழகத்தில் காணப்படும், இத்தகைய ஓவியங்கள் பெருங்கற்காலத்தைச் சார்ந்ததாக அறியப்படுகின்றன. இருப்பினும் சில ஓவியங்கள் பெருங்கற்காலத்துக்கு முந்தயதாகவும் கருதப்படுகின்றன.




எளிய வடிவில்மனித உருவங்களை கட்டமைத்து வரையும் முறை தமிழகமெங்கும் பரவலாக காணப்படுகின்றது. இம்மாதிரியான ஓவியங்களில் மனித உடல் இரண்டு முக்கோணமாகவோ அல்லது கோடுகளைக் கொண்டோ வரையப்படுகின்றது. சில சமயங்களில் இக்கோடுகள் தூரிகைகளால் வண்ணம் பூசி நிரப்பப்படும். பெரும்பாலான உருவங்களில்  காட்டப்பட்டுள்ள ஆடை மற்றும் ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் போர் வீரர்கள் அல்லது  வேட்டைக்காரர்களாக இருக்கக்கூடும் என கருதப்படுகின்றது.






உலகமெங்கும் எக்ஸ்–ரே (X-Ray) ஓவியங்கள் எனப்படும் ஓவிய முறையில் விலங்குகளின் உள் உறுப்புகளைக் காட்டும் முறை உள்ளது. தமிழகத்தில் அவை ஆலம்பாடி, செத்தவரை போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய ஓவியங்கள் இரண்டு வகைப்படும். முதலாவதில், விலங்குகளின் உள் உறுப்புக்கள் தத்ருபமாக இருக்கும், இதனை வரையும் ஓவியர்கள் வரையப்படும் விலங்குகளின் உள்ளுறுப்புகள் குறித்த முழுமையான அறிவை பெற்றிருத்தல் வேண்டும். அது போல இரண்டாம்  வகையில், உள் உறுப்புக்களப் போன்ற வடிவங்கள் எளிமையாக்கப்பட்டு அலங்கார கோடுகள் போல உள்ளுறுப்புக்கள் காட்டப்பட்டிருக்கும். சில ஓவியங்கள் கர்ப்பமான விலங்குகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகளை காட்டும் விதமாகவும் வரையப்பட்டுள்ளன.

 செத்தவரையில் காணப்படும் ஒரு ஓவியம், விலங்கொன்றினை தீயில் வாட்டும் விதம் காட்டப்பட்டுள்ளது. இக்காட்சியின் மூலம் அக்காலத்தில் எவ்வாறு மக்கள் உணவினை சமைத்தார்கள் என தெரிய வருகிறது. பாறை ஓவியங்களில் அதிக எண்ணிக்கையில் குறியீடுகளும், சில அடையாளங்களும் காணப்படுகின்றன, மேலும், வடிவியல் (geometric)  சார்ந்த மற்றும் சாராத உருப்படிவங்கள் (patterns)பெருமளவில் பெருங்கற்கால சின்னங்களில் கிடைக்கின்றன. குறிப்பாக, ஏற்பெட்டு, கீழ்வாலை,  மல்லசந்திரம், திருமலை, புறாக்கல் மற்றும் சென்னராயன்பள்ளி போன்ற பாறை ஓவியங்களில் காணப்படும் சில குறியீடுகள் பெருங்கற்கால பானை ஒடுகளில் காணப்படும் கீறல்கள் போல உள்ளன.பெருங்கற்கால சின்னங்களில் காணப்படும் ஓவியங்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்திலே காணப்படுகின்றன. பெரும்பாலான பெருங்கற்கால ஓவியங்கள் தோற்றத்தில் ஒத்த தன்மையையே கொண்டுள்ளது. பெரும்பாலான கல்திட்டைகளில் முதலில்  மேற்குபுறச் சுவரிலே அதிக அளவில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. பின்னர் வடக்கு மற்றும் தெற்குபுறச் சுவர்களில் காணப்படுகின்றது. பெருங்கற்காலச் ஈமச்சின்னங்களில் காணப்படும் பாறை ஓவியங்களில் உள்ள குறியீடுகளும், காட்சிகளும் பெருங்கற்கால மக்களோடு தொடர்புடையதாக உள்ளது.

பாறை ஓவியங்களில் பொதுவாக கையில் வில்- அம்பு வைத்திருப்பவர்கள் ஒருவருக்கொருவர் எதிர் திசையில் இருப்பர். இதைப் போலவே வரலாற்றுக் காலத்தில் இப்பகுதியில் உருவாக்கப்பட்ட நடுகற்களும் இது போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றன.

சில சமயங்களில் வில்லிருந்து அம்பு வெளியேறும் தருணத்தைக் காட்டியுள்ளனர். அது போல குதிரை மீது வீரர்கள் செல்வது போன்ற காட்சிகள் அதிகம் காணப்படுகின்றது. சில சமயங்களில் குதிரை வீரர்கள் ஒரு கையில் கேடயமும் மற்றொரு கையில் குதிரையின் கடிவாளத்தை பிடித்திருப்பது போல உள்ளது. சில சமயங்களில் கையில் நீண்ட ஈட்டி போன்ற ஆயுதத்தை கையில் ஏந்திய வண்ணம் காட்டப்பட்டுள்ளது.

தமிழக பாறை ஓவியங்களில் பறவைகளும், மரங்களும், இறையுருவங்களும் மிக அரிதாகவே தென்படுகின்றன. அது போல யானை வேட்டை, புலி வேட்டை, மான் வேட்டை, பன்றி வேட்டை, உடும்பு வேட்டை போன்ற காட்சிகள் எண்ணிக்கையில் பரவலாக உள்ளன. ஆனால் மாடுகளை வேட்டையாடுவது மிக குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. மேலும், மாடுகளை அடக்குதல், ஓட்டிச் செல்லுதல், மாடுகளின் எதார்த்த வாழ்க்கை ஆகியன அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்த மனிதர்களுக்கும் மாடுகளுக்குமிடையேயான உறவுகள் புதிய கற்காலம் தொட்டே சுமூகமானதாக இருந்துள்ளது என அறிய முடிகிறது.

இது வரை தமிழகத்தில் கண்டுபிடித்த பாறை ஓவியங்களுக்கு கால நிர்ணயம் சரியாக கணிக்கவில்லை. ஆனால் பெரும்பாலான பாறை ஓவியங்கள் உள்ள இடங்களுக்கு அருகே புதிய கற்கால அல்லது பெருங்கற்கால எச்சங்கள் காணப்படுகின்றன. இவ்விடங்களுக்கு அருகே முறையான அகழாய்வுகள் செய்யப்படவில்லை. அவ்வாறு அகழாய்வுகள் செய்தால் அதில் கிடைக்கும் பொருட்களை பாறை ஓவியங்களோடு ஒப்பாய்வு செய்து காலத்தைக் கணிக்க முடியும். பாறை ஓவியங்கள் அது வரையப்பட்ட காலத்து மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கண்ணாடியாய் அமைந்துள்ளன.


நன்றி : தமிழ் இணைய கல்விக்கழகம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home