போராளிகளுக்கு அடைக்கலமாக இருந்த அருட்பணியாளர்
அருட்பணி. பிரான்சிஸ் யோசப் அடிகளார்
முள்ளிவாய்கால் பகுதியில் பல்லாயிரம் மக்களோடு காணாமல் போன அருட்பணி. பிரான்சிஸ் யோசப் அடிகளார் 50 வருடகால குருத்துவ பயணத்தில் தனித்துவமான பல சாதனைகளை புரிந்திருக்கிறார். இறைவழியில் நின்று மனத்துணிவுடன் உண்மைக்குச் சான்று பகர்ந்து துன்பப்பட்ட மக்களோடு தனது வாழ்வினையும் இணைத்துக்கொண்டார். காணாமல் போனோர் பட்டியலில் அவரது பெயர் சோர்த்துக் கொள்ளப்பட்டு, அவரது இருப்பு கேள்விக் குறியானாலும் தமிழாரின் வரலாற்றில் அவர் தனித்துவமான ஒரு இடம்பிடித்தவர். இவ்வருட்பணியாளரின் வாழ்வின் சில பதிவுகள்.
2009 மே. 13ம் திகதி காலை நேரம், முள்ளிவாய்க்கால் பகுதி முழுவதும் ரணகளமாய் மாறியிருந்தது. திரும்பும் திசையெங்கும் சடலங்களும், அங்கவீனர்களும், ஒப்பாரிகளும், கூக்குரல்களும், பற்றியொரியும் வாகனங்களும், 12ம் திகதி நள்ளிரவு தொடங்கி 13ம் திகதி அதிகாலை வரை கடல், தரைவழி ஊடாக நடத்தப்பட்ட பல்குழல், ஆட்லறி, கனன் எறிகணைத் தாக்குதல்களின் எச்சங்கள் தான் இவைகள்.
ஒரு சில மணித்தியாலங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டும், கொல்லப்பட்டும் கிடந்தார்கள். அன்றைய தினம் மதிய நேரம் அருட்பணி. பிரான்சிஸ் யோசப் அடிகளாரை சந்திப்பதற்காக அவாரின் பதுங்கு அகழிக்கு சென்றபோது அவருடன் அவரது பணியாளர்களும், கால் ஊனமுற்ற ஒரு பெண்ணும் இருந்தார். நாங்கள் உள்ளே இருந்து உரையாடிக் கொண்டிருந்தபோது, மீண்டும் எறிகணைத் தாக்குதல்கள் சரமாரியாக மேற்கொள்ளப்பட நாங்கள் இருந்த இடத்திலிருந்து ஒரு சில மீற்றர் தள்ளியிருந்த எண்ணைக் களஞ்சியம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. எங்கும் தீச்சுவாலை அதன் வெக்கை உள்ளே இருந்த எங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அப்போது கையில் கிடைத்த துணிகளை சுற்றி தண்ணீருக்குள் தோய்த்து உடல் வெக்கையை தணித்துக் கொண்டிருந்தோம். பதுங்கு குழியை விட்டு வெளியில் செல்ல முடியாத அளவிற்கு எறிகணைகள் எம்மைச் சுற்றி வீழ்ந்து கொண்டிருந்தன.
இது தான் இறுதிச் சந்திப்பு என்பதை அன்று நான் உணரவில்லை. ஆனால் இன்று அது நிதார்சனமாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பிரான்சிஸ் அடிகளார் பல விடயங்களை மனம் விட்டு பேசினார். உரையாடல் முடிவில் அவரை எங்களோடு வந்து இருக்கும்படி கேட்டபோது, அவர் இரண்டு காலும் ஊனமுற்ற அந்தப் பெண்ணைக் காட்டி “நான் உங்களுடன் வர ஆயத்தம், ஆனால் இந்தப் பெண்ணையும் கொண்டு வந்து உங்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை” என்று உருக்கமாகவும் நிதானமாகவும் கூறிய வார்த்தைகளால் நாம் அவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல விரும்பவில்லை. இவர் சுட்டிக்காட்டிய அந்தப் பெண் இவரிடம் ஆங்கிலம் பயின்ற ஒரு மாணவி, அந்தப் பெண்ணைப் பார்த்த போது, அவளுக்கு முன்னாலே நீலநிற பேசின் ஒன்றிற்குள்ளே இரண்டு பின்னங்கால்களையயும் இழந்த அவரின் செல்லப் பிராணியான பூனைக்குட்டி காணப்பட்டது.
அடிகளார் கிளிநொச்சி அம்பாள் குளம் என்ற இடத்தில் பல வருடங்களாக இருந்து ஆன்மீக, சமூகப்பணி ஆற்றிக் கொண்டு இருந்தவர். தாய் நாட்டின் மீதும் மக்களின் விடுதலை மீதும் அதீத ஆர்வம் கொண்ட இவர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி ஓய்யு பெற்ற பின்னர் தழிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் தன்னுடைய கல்வித்துறை அனுபவத்தாலும் போர்க்கால சமூக கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட்டிருந்த பல கல்விசார்ந்த துறைகளில் தலைமைப் பதவிகளை வகித்தவார். வன்னியில் தமிழ் இளையோரினது ஆங்கில மொழிப் புலமைக்கு வித்திட்டு, நீண்ட நாள் கனவாகிய ஆங்கில மொழிக் கல்லூரியை 2004ம் ஆண்டு கிளிநொச்சியில் பிறப்பெடுக்கச் செய்து தனது ஆங்கில மொழிப் புலமையினாலும் நீண்ட கால கல்வித்துறை அனுபவத்தினாலும் இக்கல்லூரியை திறம்பட இயக்கி ஆங்கில மொழி பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.
கடின உழைப்பும், விடாமுயற்சியும் கொண்ட இவர் மக்களின் வாழ்வியலின் துன்பமான வரலாற்றுத் தடங்களுடன் தன்னை இரண்டற இணைத்துக் கொண்டார். இடம்பெயர்வு என்ற போரியல் சுழற்சிக்குள்ளே தர்மபுரம், வள்ளிபுனம், உடையார்கட்டு, இரணைப்பாலை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் என பல்வேறு குறிச்சிகளை தாண்டி போரின் இறுதிக்காலம் வரை துன்பப்படும் மக்களோடு இருந்தார். எழ்மையை வாழ்வாக்கியவர், உதவி என்று தேடிச் செல்வோரை அன்போடு அரவணைத்து மனம் கோணாமல் உதவி செய்தார். இவர் வள்ளிபுனம் பிரதேசத்தில் இருந்த போது குருத்துவத்தின் 50வது வருட நிறைவை உடையார்கட்டு தூய யூதாததேயு ஆலயத்தில் 2008 மார்கழி 21ம் திகதி ஏனைய குருக்களோடும் இறைமக்களோடும் சேர்ந்து மிகவும் எளிமையான முறையிலே கொண்டாடினார். 50 வருட குருத்துவ பயணத்தில் இறைவனின் துணையோடு வரலாற்றில் பல சாதனைகளை இவர் புரிந்திருக்கிறார்.
இடப்பெயர்வின் தாக்கம் இவரின் உடலிலும் பலவிதமான நோய்களை ஏற்படுத்தத் தொடங்கியது. உடல் பலவீனம், கண்பார்வை குறைதல் போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்தவராக, தனது இயலாமையிலும் உறுதியாக பல பணிகளைபுரிந்தவர். எந்த வேளையிலும் யாருக்கும் இவர் சுமையாக இருக்க விரும்பாதவர். இவர் அகோர எறிகணைத்தாக்குதல்கள் பலவற்றுக்குள் சிக்குண்டு இறை துணையால் பாதுகாக்கப்பட்டார். ஒருமுறை உடையார்கட்டு ஆலயத்தில் நாங்கள் ஒன்றாக இருந்தபோது எறிகணைத் தாக்குதலுக்குள் எல்லோரும் சிக்குண்டு இரவு வேளையில் சிதறி ஓடும் போது, கைத்தாங்கலாக இவரை அழைத்துச் சென்றது, இன்னும் எனது நினைவில் உள்ளது. பல தடவைகளில் உந்துருளியில் இவரை அழைத்துக் கொண்டு நீண்ட பயணங்கள் செய்யும் போது, தான் கடந்து நடந்து வந்த வாழ்வியல் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்வார். இவர் எமது கடந்த கால வரலாற்றை நன்கு அறிந்திருந்த இறைபணியாளர் என்பதைப் புரிந்து கொண்டேன்.
இவரது கண்களில் ஒன்று சத்திர சிகிச்சை செய்யப்பட்டு குணப்படுத்தப்பட வேண்டிய கட்டாய தேவை இக்காலப்பகுதியில் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேறினால் தான் மீண்டும் திரும்பி வரமுடியாது போனால், தனது பணிகள் பாதிப்படையும் என்று நினைத்தவராக, ஆரம்பத்தில் மறுத்தாலும் காலப் போக்கில் இவரது பார்வை மேலும் மேலும் குன்றிப்போக பார்வையை இழக்க நேரிடும் அபாயத்தை உணர்ந்தவராக அங்கிருந்து வெளியேற விரும்பிய போது அதற்கு ஏதுவான கால சூழ்நிலைகள் இவரின் பயணத்திற்கு சாதகமாக அமையவில்லை. இவரை அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்றுவதற்கு நாங்கள் பல முயற்சிகள் எடுத்த போதும் எதுவும் பயனளிக்கவில்லை. இருந்தாலும் எல்லாவற்றையும் நல்மனதோடு ஏற்றுக் கொண்டார்.
2009 மேஇ 13ம் திகதி அவரை விட்டு நான் பிரியும் போது இனம்புரியாத பயம் ஒன்று எனது மனதில் இருந்தது. தனித்து விடப்படுகிறாரே என்று எனது உள்மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. அந்த வேளையில் “கடவுளுக்குச் சித்தமானால் மீண்டும் ஒரு முறை சந்திப்போம்”, என்ற அவரது வாயிலிருந்து வந்த வார்த்தைகள் என்னை சற்று ஆறுதல்ப்படுத்தியது. அந்த இடத்திலிருந்து அன்றைய தினமே வெளியேறி இன்னுமொரு இடத்தில் பாதுகாப்புத் தேடிய இவர் மே மாதம் 17ம் திகதி வட்டுவாகல் பாலத்தை தாண்டி பல இலட்சக்கணக்கான மக்களோடு இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் சென்றார். களைப்பு, சோர்வு, அவரது உடலின் இசைவாக்கத்திலே தளர்ச்சியை ஏற்படுத்த ஒரு மரநிழலின் கீழ் தன்னுடன் இருந்த தனது பணியாளர்களோடு இளைப்பாறிக் கொண்டிருந்தர். பலர் அவரை அடையாளம் கண்டு தங்களின் சோகங்களை அவரோடு பகிர்ந்து கொண்டனர். இவரின் பிரசன்னத்தை அங்கு கண்ட அரசியல்த்துறையைச் சேர்ந்த சிலர் மே 18 காலை வேளையில் இவரை அணுகிச் சென்று தங்களை அடையாளப்படுத்தி, இராணுவத்தினரிடம் சரணடைய தமக்கு உதவிபுரியும்படி கேட்டுக் கொண்டார்கள். அடிகளாரின் ஆங்கில மொழிப்புலமை சரணடைதலுக்குரிய ஒரு சுமூகமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதையும், அவர் ஒரு குருவானவர் என்பதால் இராணுவத்தினர் இவருக்கு மதிப்பளிப்பார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்கள். தாராள உள்ளத்தோடு மனம் கோணாமல் உதவி செய்யும் மனம் படைத்த இவர், அதற்கு இசைந்து அதனை செயற்படுத்துவதற்கு, இராணுவ உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டார். அவர்களும் சரணடைதலுக்கு சம்மதித்து சரணடைபவர்களின் பெயர் பட்டியலை ஆயத்தம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆரம்பத்தில் ஒரு சிலர் மட்டுமே தங்களை அடையாளப்படுத்தினாலும், அடிகளாரின் அந்த முயற்சியை அறிந்த இன்னும் பலர் அங்கு ஒன்று கூடி குடும்பசகிதம் தங்களின் பெயர் விபரங்களை அப்பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள். ஒரு சிலருடன் ஆரம்பித்து இப்பெயர்பட்டியல் மிகவும் நீண்ட பட்டியலாக மாறியது. இறுதியில் அந்தப் பெயர்பட்டியலை பெற்றுக் கொண்ட அதிகாரி அவர்களுக்கென விசேட பேருந்து வண்டிகளை ஒழுங்கு செய்து அவற்றில் ஏற்றிய பின்னர் அடிகளாரையும் அந்தப் போராளிகளோடு ஏற்றிச் சென்றார்கள். இந்த சம்பவங்களை பலர் கண்டுள்ளார்கள். அடிகளாரின் இருப்பு இப்போது கேள்விக்குறியாக மாறி விட்டது. அடிகளாரோடு அந்த பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டது.
இவ் அருட்பணியாளர் முள்ளிவாய்க்கால் என்ற, உலகப் பந்தின் ஒரு சிறு புள்ளியில் மக்களின் துன்பியலோடு தன் இருப்பை கரைத்துக் கொண்டவர். இறுதிக் காலத்திலும் இறைபிரசன்னத்தை மக்களுக்கு கொடுத்தவர். காற்றோடும், கடலோடும், மண்ணோடும் கரைந்து போன பல்லாயிரக் கணக்கான மனிதர்களோடு தன் வாழ்வையும் இணைத்துக் கொண்டவர். வரலாற்றில் உம் தடங்களை என்றும் நாம் நினைவில் கொள்வோம்.
ஆக்கம் : அருட்பணி. அன்டன் ஸ்ரிபன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home