Thursday, 6 August 2020

தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்



தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும் பற்றிய ஒரு பார்வை. கைதடி, நாவற்குழி, மறவன்புலவு, தனங்கிளப்பு, சாவகச்சேரி, மட்டுவில், மீசாலை, சரசாலை, மந்துவில், எழுதுமட்டுவாழ், மிருசுவில், உசன், கச்சாய், கொடிகாம்ம்,நுணாவில், சங்கத்தானை முதலான ஊர்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 90 சதுர மைல் பரப்புள்ள வட்டாரமே ‘தென்மராட்சிப் பிராந்தியம்‘ என அழைக்கப்படுகிறது.




தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்தென்மராட்சி, வடமராட்சி ஆகிய பிராந்தியங்கள் முன்னொரு காலத்தில் மறவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இடங்கள் என்பதோடு, அப்பிராந்தியங்களுக்கு தொன்மையான வரலாறு உண்டு என்பதை அம்மக்களிடையே நிலவும் ஐதீகங்கள், வாய்மொழிச் செய்திகள் ஆகியவை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அவற்றை நானும் முதன்மை ஆதாரங்களாக குறிப்பிட்டு கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. மாறாக இப்பிராந்தியத்திற்கு 2000 ஆண்டுகளுக்குக் குறையாத தொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதற்கு, 1980 ஆம் ஆண்டின் பின்னர் இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த ஆதாரங்களை எடுத்துக் காட்டுவது பொருத்தமானது. 

அத்துடன் தென்மராட்சியின் தொன்மை தொடர்பாக நம்பத்தகுந்த வரலாற்று மூலங்களில் வரும் குறிப்புக்களை சுட்டிக்காட்டுவதும் அவசியம் ஆகும்.
யாழ்ப்பாண அரசு தொடர்பாக எழுந்த தமிழ் இலக்கியங்களில் கி.பி. 13ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு வரை நல்லூரைத் தலைநகராகக் கொண்டு தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த போது, யாழ்ப்பாணத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்றாக தென்மராட்சி குறிப்பிடப்படுகிறது. ஆயினும் யாழ்ப்பாணம் (யாழ்பாணாயன் பட்டினம்) என்ற பெயர் முதன் முறையாக கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்கு உரிய திருப்புகழிலும், விஜயநகரப் பேரரசு காலக் கல்வெட்டிலும் குறிப்பிடப்படுவதற்கு முன்னர் தென்மராட்சிக்கு உட்பட்ட சில இடங்கள் வரலாற்றுச் சிறப்புடைய வட்டாரங்களாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இராஜாதிராஜ சோழன் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, அவனது படைகள் வட இலங்கை மீது படையெடுத்து மட்டிவால் என்னும் ஊரில் தங்கியிருந்த படைவீரர்களையும், யானைகளையும் சிறைப்பிடித்து தமிழகத்திற்கு கொண்டு சென்றதாக “திருவாலங்காடு‘ மற்றும் ‘பல்லவராயன் பேட்டை‘க் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வாறு கல்வெட்டுக்களில் கூறப்படும் ‘மட்டிவால்‘ என்ற இடத்தைப் பேராசிரியர் பரணவிதானா மற்றும் பேராசிரியர் நீலகண்டசாஸ்திரி ஆகியோர் தென்மராட்சியில் உள்ள தற்போதைய மட்டுவில் கிராமம் என அடையாளப் படுத்தியுள்ளனர்.

14ஆம் நூற்றாண்டில் எழுந்த ‘நம்பொத்த‘ என்ற சிங்கள இலக்கியம் வட இலங்கையை ‘தமிழ் பட்டினம்‘ என அழைப்பதோடு, அப்பட்டினத்தின் எல்லையில் எல்லைக் கற்கள் நாட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றது. அது கூறுகின்ற இடங்களில் தென்மராட்சியும் உள்ளடங்கி இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. 15ஆம் நூற்றாண்டில் எழுந்த “கோகிலசந்தேஸய‘ என்ற சிங்கள இலக்கியம் சாவகச்சேரிப் பிராந்தியத்தை “சாவக்கோட்டை‘ என தென்மராட்சியை யாழ்ப்பாண அரசுடன் தொடர்பு படுத்துகிறது. இதே பிராந்தியத்தை 15ஆம், 16ஆம் நூற்றாண்டில் எழுந்த ‘திரிஸிங்கள கடயிம் ஸஹ வித்தி’ என்னும் நூல் ‘சாவகிரி‘ எனவும் குறிப்பிடுகின்றது. பேராசிரியர் சி.பத்மநாதன் “யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னரே வட இலங்கையில் தமிழர் சார்பான அரசு ஒன்று ‘சாவகன்‘ தலைமையில் இருந்ததால் அவனது ஆதிக்கம் ஏற்பட்டதன் அடையாளமே தென்மராட்சியில் ‘சாவகச்சேரி‘, ‘சாவகன்கோட்டை‘ முதலான இடப் பெயர்கள் தோன்றக் காரணம்” எனக் குறிப்பிடுகிறார்.
தென்மராட்சியின் வரலாறு யாழ்ப்பாண அரசு காலத்தில் மேலும் முன்னிலை பெற்றதெனக் கூறலாம். வலிகாமம், வடமராட்சி ஆகிய பிராந்தியங்களை விட யாழ்ப்பாண அரசு கால நிர்வாகத்தில் தென்மராட்சியின் நிலப்பரப்பு மிகப் பெரியதாக இருந்தது. யாழ்ப்பாண அரசு காலப் பொருளாதாரத்திலும் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்திலும் இப்பிராந்தியமே முதன்மை பெற்றிருந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. பெருநிலப்பரப்பு, கடல்சார் வாணிபம் என்பவற்றில் ‘கச்சாய்த் துறைமுகம்‘ முக்கிய இடத்தைப் பெற்றதுடன் யாழ்ப்பாண அரசுக்கு உதவியாக தென்னிந்தியாவில் இருந்து வந்த படைகள் இத்துறைமுகத்தையே பயன் படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
‘வையாபாடல்‘, ‘கைலாயமாலை‘ முதலான தமிழ் நூல்கள், யாழ்ப்பாண அரசு காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்ட தமிழ்க் குடிகளில் ஒரு பிரிவினர் தென்மராட்சிப் பிராந்தியத்திலுள்ள கச்சாய், முகமாலை, கோகிலாக்கண்டி முதலிய இடங்களில் குடியேற்றப்பட்டதாகவும் அவ்விடங்களை நிர்வகிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும் கூறுகின்றன. கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பின்னர் இலங்கையில் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்த வரலாறு தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் குடியேறிய இஸ்லாமிய மக்கள் படிப்படியாக தெற்கு நோக்கி நகர்ந்து கேரளாவில் உள்ள காயல் பட்டினத்தை தமது வணிக நகரமாக மாற்றியதுடன் தமிழர்களுடன் திருமண உறவுகளை ஏற்படுத்தியதால் அவர்கள் தமிழ் பேசும் மக்களாக மாறினர். 

காலப்போக்கில் அவர்கள் இலங்கையுடனும் வணிக, கலாசார உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணத்துடன் தொடர்பை ஏற்படுத்திய அவர்கள் முதலில் தென்மராட்சியில் உள்ள உசன், முகமாலை, கச்சாய், சாவகச்சேரி ஆகிய இடங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தியதாக ‘யாழ்ப்பாண வைபமாலை‘ குறிப்பிடுகின்றது.
கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்த்துக்கேய ஆசிரியரான கெய்ரோஸ் பாதிரியார், போர்த்துக்கேயருக்கு எதிராக யாழ்ப்பாண மன்னர்கள் போரிட்ட காலங்களில் அப்படை வீரர்களின் காவல் மையமாகவும் யுத்த தளபாடங்களைப் பாதுகாக்கும் இடங்களாகவும் தென்மராட்சியில் உள்ள மட்டுவில், மந்துவில் முதலான கிராமங்கள் இருந்தன எனக் கூறுகிறார். பருத்தித்துறையில் இறங்கி யாழ்ப்பாணம் நோக்கி போர்த்துக்கேயப் படைகள் முன்னேறிய போது, அச்சுவேலிக்கும் புத்தூருக்கும் இடையில் யாழ்ப்பாண மன்னர்களுடன் நடைபெற்ற போரைத் தொடர்ந்து போத்துக்கேயப் படைகளின் ஒரு பிரிவினர் கிழக்கு நோக்கி தென்மராட்சிக்குச் சென்றதாக போர்த்துக்கேய ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாண அரசு தொடர்பாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் போர்த்துக்கேயப் படைகளிடம் தோல்வியடைந்த சங்கிலி மன்னன் கோப்பாயிற்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து தொண்டமானாறு கடல் நீரேரி ஊடாக மந்துவில் சென்றடைந்ததாகக் கூறுகிறது. இன்றும் மந்துவிலில் இடியுண்டு காணப்படும் புராதன கட்டடம் ‘சங்கிலியன் கோட்டை’ என்றே அழைக்கப்படுகிறது.
போத்துக்கேயர் ஆட்சியின் முடிவு காலமான 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

அதில் 128 கிராமங்களில் 120,000 மக்கள் வாழ்ந்து வந்ததாக போர்த்துக்கேய ஆவணங்கள் கூறுகின்றன. அத்துடன் தென்மராட்சியையும் அதைச் சூழவுள்ள பிராந்தியத்திலும் 52 கிராமங்கள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கணக்கு யாழ்ப்பாணத்தின் அன்றைய மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதமான மக்கள் தென்மராட்சிப் பிராந்தியத்தில் வாழ்ந்ததைக் காட்டுகிறது. இவ்வாறு ஐரோப்பியர் ஆட்சி வரை தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும் வரலாற்று இலக்கியங்களில் கூறப்பட்டாலும் அதன் தொன்மையான வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் சமீபகாலத் தொல்லியல் கண்டு பிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு.


தென்மராட்சியின் பூர்வீக மக்கள்
தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கம் தென்மராட்சிப் பிராந்தியத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பூர்வீக மக்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எப்போது வந்தார்கள்? ஆகியவை தொடர்பான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் 1970களின் பின்னரே ஓரளவுக்கு மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய தொல்லியல் ஆய்விற்கு 1970களில் பென்சில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருள் ஆய்வாளர் விமலாபேக்கிலே தலைமையில் கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு களம் அமைத்து கொடுத்தது. இந்த ஆய்வின் மூலம் குடாநாட்டின் தொடக்ககாலப் பூர்வீக மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய திராவிடர் என்பதும், அவர்கள் தென்னிந்தியாவின் தென்பகுதியில் இருந்து குறிப்பாகத் தமிழகத்திலிருந்து இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறினர் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
1980களில் குடாநாட்டின் பூர்வீக குடியேற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் பொன்னம்பலம் இரகுபதி, தனது ஆய்வுகள் மூலம் குடாநாட்டில் இருந்த 40 இற்கும் மேற்பட்ட புராதன குடியிருப்பு மையங்களை வெளிக்கொணர்ந்தார். அக்குடியிருப்பு மையங்கள் சில தென்மராட்சியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

தற்போதைய வாரிவனேஸ்வரர் ஆலயத்திற்கு மேற்காக உள்ள மண்மேட்டில் அவர் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வின் மூலம், கந்தரோடையை ஒத்த புராதன குடியிருப்புக்கள் அங்கு இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
1990களின் பின்னர் தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள கண்ணாடிப்பிட்டி, மந்துவில், வரணி சோழன்மாசேரி, வேலம்பிராய் முதலிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் அவ்விடங்களில் புராதன காலத்தில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆதியில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்த மக்கள் இலகுவாக நீரைப் பெறக்கூடிய கடற்கரை சார்ந்த மணற்பாங்கான பிரதேசங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் இலகுவாகக் குடியிருப்புக்களை அமைக்கக் கூடிய சிறிய பற்றைக்காடுகள் உள்ள இடங்கள் கடல் உணவைப் பெறக்கூடிய பரவைக் கடல் பிரதேசங்கள், கடல் போக்குவரத்திற்குச் சாதகமான துறைமுகங்கள் ஆகியவற்றைத் தமது குடியிருப்பை அமைக்கக்கூடிய இடங்களாகத் தெரிவு செய்தனர். தென்மராட்சியில் இச்சாதகமான சூழல்கள் பல இடங்களில் காணப்பட்டதால் அவ்விடங்களில் ஆதியில் மக்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தியிருப்பார்கள் எனக் கருத இடமுண்டு.


கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்தமதம் இலங்கையில் பரவ முன்னர் இங்கு வாழ்ந்த மக்களும் பண்பாடும் தென்னிந்தியாவின் தென்பகுதியில் இருந்து ஏற்பட்டன என்பதை அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் உறுதிசெய்கின்றன. தென்மராட்சியின் அமைவிடம் இலங்கை  தமிழக உறவின் குறுக்கு நிலமாகவும் தமிழகப் பண்பாட்டை முதலில் உள்வாங்கும் தொடக்க நிலமாகவும் இருப்பதால் ஆதிகாலம் தொடக்கம் தமிழகப் பண்பாட்டின் செல்வாக்குக்கு உட்பட்ட பிராந்தியமாக இப்பிராந்தியம் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
புராதன காலத்தில் தென்மராட்சியின் அயல் நாட்டுத் தொடர்புகள்
1990 களில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பிரதி அதிபராக இருந்த அமரர் பாலச்சந்திரன் தென்மராட்சியில் தான் சேகரித்த பண்டைய நாணயங்கள் சிலவற்றை எனது ஆய்வுக்காகக் கொடுத்திருந்தார். தென்மராட்சியைப் பற்றிய  தொல்லியல் ஆய்வுக்கு அதுவே உந்து சக்தியாக அமைந்தது. தென்மராட்சி தொடர்பான தொல்லியல் ஆய்வில், பல்வேறு காலகட்டத்தை சேர்ந்த வட இந்திய, தென் இந்திய, தமிழக, உரோம நாணயங்கள் முதலியன கண்டுபிடிக்கப்பட்டன. ஆயினும் தென்மராட்சியின் தொன்மையையும் பெருமையையும் முக்கியத்துவத்தையும் அப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உரோமர் கால நாணயங்கள் பறைசாற்றுகின்றன.
கி.பி. 1ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க நாட்டவரான தொலமி தனது நூலில் தென்மராட்சிக்கு உட்பட்ட வட இலங்கையை “நாகடிப‘ (நாகதீவு) எனக் கூறுகிறார். அதேகாலப் பகுதியைச் சேர்ந்த “பெரிப்புலஸ்‘ என்ற நூல் வட இலங்கைக்கும் மேற்காசிய நாடுகளுக்கும் இடையிலான வணிக உறவு பற்றிக் கூறுகிறது. 
 
Tamil Charam Group (தமிழ்ச்சரம் தகவல்கள்)
Public group · 219 members
Join Group
 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home