Sunday 31 May 2020

மர்மங்கள் நிறைந்த ஆழம் காணமுடியாத நிலாவரைக் கிணறு







நிலாவரைக் கிணறானது, யாழ்மண்ணின் பேணிப் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு புதையலாகும். யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றினுள் நடந்த ஆய்வினைப் பற்றிய தகவல்கள்.

1. பெயர்:
பண்டைய காலத்தில் இக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாததால் இதன் ஆழம் வானில் உள்ள நிலா வரைக்கும் என சொல் லப்பட்டதால் இதன் பெயர் நிலாவரை என உருவாகியது.

2. அமைவிடம்:
யாழ்ப்பாண நகருக்கு வடக்கு திசையில் 16 கிலோமீற்றர் தொலைவில், அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராச வீதி, புத்தூர் பருத்தித்துறை நெடுஞ்சாலை சந்திக்கும் சந்தியில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, J/ 275 கிராமசேவகர் பிரிவுக்குள் உள்ள நவக்கிரி என்னும் ஊரில் நிலாவரைக் கிணறு அமைந்துள்ளது, அருகில் நவசைலேசுவரம் என்னும் ஓர் சிவனாலயமும் உண்டு.

3. அளவு:
தற்போதுள்ள நிலாவரைக் கிணறு 52 அடி நீளம், 37 அடி அகலம் கொண்டு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது.

4. சொந்தம்:
தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம்.

5. பராமரிப்பகம்:
இதன் பராமரிப்பு பணிகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொள்கின்றது. இருந்தபோதிலும், நிலாவரைக் கிணற்றின் நீர் வழங்கும் பணிகள், வாதராவத்தை குடிநீர் விநியோகத்திட்டம் என்ற பெயரில் தேசிய வடிகாலமைப்பு, குடிநீர் அதிகார சபையால் மேற்கொள்ளப்படுகிறது.

6. ஆய்வு நாள்:
கடந்த 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு பிற்பகலில் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்று பார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் நவர்கிரி, நிலாவரைக் கிணறு, தன்னுள் பல மருமங்களையும் வியப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், எந்தவொரு ஆய்வாலும் இதன் ஆழத்தையோ உருவாக்கத்தைப் பற்றியோ முடிவுகளைத் தர இயலவில்லை.

இந்நிலையானது கடந்த 2016ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது, அன்று சிறீலங்காக் கடற் படையின் சுழியோடிகள், படுவிகளின்(robot) உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத் தை அறியும் வண்ணம், அனைத்து புதுமை யான பாதுகாப்பு நடைமுறைகளையும் பின் பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினர்.

கிணற்றுக்குள் 55.5m (182 அடி)​ சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. அதாவது சராசரியாக இரண்டு பனை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது.



இங்குள்ள நீர் 31 அடிவரையான ஆழத்திற்கு நன்னீராக உள்ளது. அதன்கீழ் 81 அடிவரை யும் உவர் தன்மையானதாகவுள்ளது. அதன் கீழ் நிலத்தடி நீரோட்டத்துடன் நீர் தொடர்பு பட்டுள்ளது.

சுழியோடிகள் கொண்டு சென்ற படுவிகள் எடுத்த நிழற்படங்களின் மூலம் கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் விழுந்து கிடப்பது தெரியவந்தது.

அவற்றில் ஒரு வண்டில் முற்றாகச் சிதை வடைந்த நிலையிலும் மற்றைய இரண்டும் வண்டிலென அடையாளம் காணக்கூடிய வாறும் காணப்படுகிறது.

இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ் வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித புலனங்களும் கிடை யாது. வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இவை உள்விழுந்து பல நூற்றாண்டுகளாகலாம் என்று என அனுமானிக்க முடிகிறது.



'அடியில் உள்ள மாட்டு வண்டிகள் '

படுவிகள்(robot) செய்த ஆய்வில், கிணற்றின் அடியில் பல திசைகளை நோக்கி, பல நீரடி பிலங்கள்(under water cavern) காணப்படுகின்றன. இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம் பழத்தைப் போட்டால், அதை சில மணி நேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என சிறுவயதில் பலர் கேள்விப்பட்டதுண்டு. இன்று, அதற் கான சாத்தியப்பாடுகள் இருப்பதை படுவிகளின் ஆய்வுகள் மூலம் கிடைத்த நீரோட்டங்களை வைத்து உறுதி செய்யப் படுகிறது.

கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு பிலம்(cavern) ஒன்று காணப் படுவதை இப்பொழுதும் பார்க்க முடியும். அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது. இந்தக் பிலத்திற்கும் நிலாவரைக் கிணற்றுப் பிலத்திற்கும் இடையிலான நீரோட்டத் தொடர்பு இருப்பதை உய்த்தறிய முடிகிறது.

'மற்றொரு மாட்டு வண்டி '

நிலாவரைக் கிணற்றுக்கு நேரடியான நீரக(நிலத்தடி நீர்) தொடர்பு இருப்பதனால் வறட்சியின்போதும் மழைக்காலத்தின் போதும் நீர் மட்டம் குறைவதோ கூடுவதோ கிடையாது.

இலங்கையின் வடபகுதியின் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைத்தோற்ற அமைப்பே நீரக பிலங்களிற்கான காரணமாகும்.

இதுகுறித்து பேராசிரியர் சிவச்சந்திரனின் ‘ நிலாவரைக் கிணறு ஜீவநதியா’ என்கிற தனது கட்டுரையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலி ருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டுக்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலம் என்று புவிச்சரித வியலாளர்களால் வழங்கப்படுகின்றது.

சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்தில் இவை தோன்றியவையாகும். அக்காலத்தில் இப் பிரதேசங்கள் கடலிலிருந்து மேலுயர் த்தப்பட்டன.

இதனாலேயேதான் யாழ்ப்பாணப் பகுதி களில் கிணறு தோண்டும் போது, சங்கு, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்களின் சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.

இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும் பௌதிக இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப் பாறைகளாக உருமாற்றம் பெற்றன.

சுண்ணப் பாறைகள் வன்னிப் பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வட கரைப்பகுதிகளில் குறிப்பாக பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப் படுகின்றன.

இப்பாறைப் படைக்கு மேல் மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன. ஓர் அங்குல மண் படிவு உருவாவதற்கு குறைந்தது 100 வருடங்கள் செல்லும் என புவிச்சரித விய லாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

ஒழுங்குமுறையற்று குடாநாட்டு மண் வளத் தை சுரண்டுவோர் இதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக் கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதனாலேயே இங்கு நாம் தரைக்குக்கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப்பெற முடிகின்றது.

இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும் வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமாக மக்கள் வாழ்வதற்கும் நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கி யிருப்பதற்கும் இங்கு தரைக்கீழ் நீரை இலகுவில் பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.

புவிச்சரிதவியலாளரால் குடாநாட்டில் சுண்ணக் கற்பாறை தரையின் கீழ் நீரோடும் பிலங்கள்(cavern) அடையானம் காணப் பட்டுள்ளன. மழையால் பெறப்படும் நீர், நிலத்துக்குள் ஊடுருவிச்சென்று, கடினமான அடித்தள சுண்ணக் கற்பாறைப் படைகளில் தங்கி நின்று, தரைக்கீழ் நீராகக் காணப்படு கின்றது. கிணறு தோண்டும் போது இத்தரை க்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் வந்து தேங்குகின்றது.



இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு, பெரிய பிலங்களாக உருமாறி விடுகின்றன. இப்பிலங்கள் சில அடி முதல் பல மைல் நீளம் வரை ஒரே தொடராகத் தரைக்குக் கீழே அமைந்திருக்கி ன்றன.

பிலம் மேலும் மேலும் அரிக்கப்பட, அதன் பரிமாணம் அதிகமாவதால் பிலத்தின் மேற்பரப்பு இடிந்து வீழ்கின்றது. இவ்வாறு உருவான ஒரு பிலமே நிலாவரைக் கிணறு. இவ்வாறு, மேற்பரப்பு இடிந்து வீழ்ந்த தால் உருவாகிய பிலங்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டில் பல பகுதிகளில் காணப்படு கின்றன.

இவ்வாறான கிணறுகளை நாம் நீர்ப்பாசன த்திற்காகவும். மழை நீரை தரைக்குக் கீழே சேமிப்பதற்கான மீள்நிரப்பியாகவும் பயன் படுத்தலாம். நிலாவரைக்கிணறு உள்ளிட்ட இவ்வாறான கிணறுகளிற் சில நீண்டகால மாகப் பாசனத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எழுபதுகளில் நீர்வள வடிகால மைப்புச் சபையினர் இவ்வகைக் கிணறுகள் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந் தனர்.

நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி 10 மணித்தியாலங்களில் 30.000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத் திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக் கூடிய தன்மை வெளியிடப்பட்டது. மேலதிக மாக நீரை இறைப்போமாயின் உப்பு நீர் மேலோங்கிவரும் இடரும் உள்ளது.

நிலாவரை தொடர்பான கர்ண பரம்பரைக் கதையானது மிகவும் சுவையானது . ஏனெனில் இக்கதை இராமாயணத்துடன் தொடர்புபட்டுள்ளது.

இராமன், சீதையை மீட்பதற்காக இராவண னுடன் போர் புரிவதற்கு, வானரப் படைக ளுடன் இலங்கை வந்த போது, வானரப் படைகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய் வதற்காக தனது அம்பை ஊன்றி, நீர் எடுத்த இடமே இது என்று அந்த கர்ண பரம்பரைக் கதை கூறுகிறது.

எது எவ்வாறாயினும், நிலாவரைக் கிணறா னது, யாழ்மண்ணின் பேணிப் பாதுகாக்கப் பட வேண்டிய ஒரு புதையலாகும்.

1880களில் யாழ்ப்பாணம் இப்படித்தான் இருந்தது || Resource : ' 7 years in Ceylon ' (1889)


































 
Tamil Charam Group (தமிழ்ச்சரம் தகவல்கள்)
Public group · 219 members
Join Group
 

அமெரிக்காவரை சென்ற ஈழத்துப் பாய்க்கப்பல்



தென்னாசிய நாடொன்றில் கட்டப்பட்டு காற்றின் துணையுடன் இயங்கும் கப்பலொன்று  ஐரோப்பா கடந்து Atlantic கடல்வழியே அமெரிக்காவரை பயணம்சென்றது உலக வரலாற்றில் இவ்வாறு ஒரே ஒருமுறைதான். இச் சாதனைப் பயணத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த  தண்டையல் கனகரத்தினம் தம்பிப் பிள்ளை தலைமையில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐந்துகடலோடிகள் முழுமையாக பங்கேற்றிருந்தனர்.

89அடி நீளமும் 19அடி அகலமும் கொண்ட அன்னபூரணி 1930இல் வல்வெட்டித்துறை மேற்குத் தெருவாடியில் சுந்தரமேஸ்திரியாரால் கட்டப்பட்டது. உள்ளூர் வேப்பமரத்தினால் கட்டப்பட்ட இக்கப்பல் 1936 இன் இறுதியில் பிரபல கடலோடியான திரு.William Albert Robinson என்பவரால் கொள்வனவு செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. 

சூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக்கடலில் பயணம் செய்தபோது ஏற்பட்ட புயலில் சிக்கியகப்பல் 250மைல்கள் பின்புறமாக பெய்ரூத்வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரம் மைல்களையும் பலகடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 01 ஓகஸ்ட் 1938 இல் Massachusetts மாநிலத்திலுள்ள Glocester துறைமுகத்தில் நிறைவுபெற்றது.



தென்னாசிய நாடொன்றில் கட்டப்பட்டு காற்றின் துணையுடன் இயங்கும் கப்பலொன்று  ஐரோப்பாகடந்து Atlantic கடல்வழியே அமெரிக்காவரை பயணம் சென்றது உலகவரலாற்றில் இவ்வாறு ஒரே ஒருமுறைதான். இச் சாதனைப் பயணத்தில் வல்வெட்டித்துறை  தண்டையல் கனகரத்தினம் தம்பிப் பிள்ளை தலைமையில் வல்வெட்டித்துறையைச்சேர்ந்த ஐந்துகடலோடிகள் முழுமையாக பங்கேற்றிருந்தனர். 



அமெரிக்கா சென்ற மூன்றாவதுமாதத்தில் அன்னபூரணி 22 November 1938 இல் தென் Pacific சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்றுநாட்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில் 100 மைல் வேகத்தில் வீசியகாற்றையும் 40 அடி உயரத்திற்கு எழுந்த அலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது. வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமரக் கட்டுமானமும் அதன் செய்வினைத் திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196 மைல்களைக் கடந்து 15 February 1939 இல் Pacific சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலக சாதனைப் பயணத்தையும் வெற்றிகரமாக முடித்துக்கொண்டது. 



அன்னபூரணியின் முழுமையான பெயர் அன்ன பூரணி அம்மாள் என்பதாகும். Robinson ஆல் கொள்வனவு செய்யப்பட்ட பின் Florence C. Robinson என கப்பலின் பெயர் மாற்றப்பட்டது. அன்ன பூரணியின் Tahiti பயணம்பற்றி Tahiti Bound மற்றும் Wanderer எனும் இருநூல்கள் வெளிவந்துள்ளன. Florence C. Robinson இன் இப்பயணத்தின் போது அமெரிக்க தலைநகரான Washington  நகருக்கு அண்மையில் உள்ள Baltimore துறைமுகத்திற்கு அண்மையில் நீங்கள் கீழே காணும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தனது ஒன்பது பாய்களையும் முழுமையாக விரித்தபடி ஓடிவரும் இரட்டைப் பாய்மரக் கப்பலான அன்னபூரணியின் கண்ணைக்கவரும் கம்பீரத்தோற்றம் இதுவாகும். 
இந்து சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம், பசுபிக்ச முத்திரம் என உலகத்தை சுற்றிய அன்னபூரணியின் பயணம் வல்வெட்டித்துறையின் அழிக்கமுடியாத பெருமையாகும். 

தமிழில் வந்த பின்வரும் புத்தகமும் அப்பயணத்தைப் பற்றியது எனினும் இப்புத்தகத்தில் பல தகவல்கள் இல்லை.


Saturday 30 May 2020

யாழ் நூலகம் தீக்கிரையாகி 39 வருட நிறைவு



1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். ஹிட்லர் கூட செய்யாத கொடூர இன அழிப்பின் உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.

இன்றோடு தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 39 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும்.

20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் 1 இல் எரிக்கப்பட்டுச் சாம்பலானது.

இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், ஏட்டுச் சுவடிகளும் வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்தி வந்த நூல் நிலையமே இது.

இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.

1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணி தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் அரச சிங்கள காவல்துறையினரின் உதவியோடு திட்டமிட்ட சதியாக இடம்பெற்றது.

இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது  தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. தமிழீழ விடுதலை போராட்டம் வீச்சுப் பெற யாழ் நூலக எரிப்பும் ஒரு காரணமாயிற்று.

1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போன அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளனுமாகிய வண. டேவிட் அடிகள். அந்த நூலக எரியூட்டலினால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு இலக்கியவாதி “சுஜாதா” 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் “ஒரு இலட்சம் புத்தகங்கள்” என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.

அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றை எழுதினார். இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து “கிருதயுகம்” என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.

யாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு குறித்த “The Jaffna Public Library rises from its ashes” என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார். எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தை ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.

இவை போல் பல ஆவண நூல்கள் யாழ் நூலக எரிப்பு குறித்து உருவாயின. இந்த கொடும் வலியை உணர்வில் ஏற்றுக் கொள்ளும் தமிழ் மக்கள் தாம் வாழும் இடமெல்லாம் ஆவணப்படுத்தல்களையும் நூலகங்களையும் கட்டி எழுப்பி அன்று மூண்ட தீயின் எழுச்சியை உலகெங்கும் விதைக்க வேண்டும்.

நன்றி : சோமபாலன்

Sunday 17 May 2020

போராளிகளுக்கு அடைக்கலமாக இருந்த அருட்பணியாளர்





அருட்பணி. பிரான்சிஸ் யோசப் அடிகளார்     
முள்ளிவாய்கால் பகுதியில் பல்லாயிரம் மக்களோடு காணாமல் போன அருட்பணி. பிரான்சிஸ் யோசப் அடிகளார் 50 வருடகால குருத்துவ பயணத்தில் தனித்துவமான பல சாதனைகளை புரிந்திருக்கிறார். இறைவழியில் நின்று மனத்துணிவுடன் உண்மைக்குச் சான்று பகர்ந்து துன்பப்பட்ட மக்களோடு தனது வாழ்வினையும் இணைத்துக்கொண்டார். காணாமல் போனோர் பட்டியலில் அவரது பெயர்  சோர்த்துக் கொள்ளப்பட்டு, அவரது இருப்பு கேள்விக் குறியானாலும் தமிழாரின் வரலாற்றில் அவர்  தனித்துவமான ஒரு இடம்பிடித்தவர். இவ்வருட்பணியாளரின் வாழ்வின் சில பதிவுகள்.
2009 மே. 13ம் திகதி காலை நேரம், முள்ளிவாய்க்கால் பகுதி முழுவதும் ரணகளமாய் மாறியிருந்தது. திரும்பும் திசையெங்கும் சடலங்களும், அங்கவீனர்களும், ஒப்பாரிகளும், கூக்குரல்களும், பற்றியொரியும் வாகனங்களும், 12ம் திகதி நள்ளிரவு தொடங்கி 13ம் திகதி அதிகாலை வரை கடல், தரைவழி ஊடாக  நடத்தப்பட்ட பல்குழல், ஆட்லறி, கனன் எறிகணைத் தாக்குதல்களின் எச்சங்கள் தான் இவைகள்.





 ஒரு சில மணித்தியாலங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டும், கொல்லப்பட்டும் கிடந்தார்கள். அன்றைய தினம் மதிய நேரம் அருட்பணி. பிரான்சிஸ் யோசப் அடிகளாரை சந்திப்பதற்காக அவாரின் பதுங்கு அகழிக்கு சென்றபோது அவருடன் அவரது பணியாளர்களும், கால் ஊனமுற்ற ஒரு பெண்ணும் இருந்தார். நாங்கள் உள்ளே இருந்து உரையாடிக் கொண்டிருந்தபோது, மீண்டும் எறிகணைத் தாக்குதல்கள் சரமாரியாக மேற்கொள்ளப்பட நாங்கள் இருந்த இடத்திலிருந்து ஒரு சில மீற்றர்  தள்ளியிருந்த எண்ணைக் களஞ்சியம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. எங்கும் தீச்சுவாலை அதன் வெக்கை உள்ளே இருந்த எங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அப்போது கையில் கிடைத்த துணிகளை சுற்றி தண்ணீருக்குள் தோய்த்து உடல் வெக்கையை தணித்துக் கொண்டிருந்தோம். பதுங்கு குழியை விட்டு வெளியில் செல்ல முடியாத அளவிற்கு எறிகணைகள் எம்மைச் சுற்றி வீழ்ந்து கொண்டிருந்தன.
இது தான் இறுதிச் சந்திப்பு என்பதை அன்று நான் உணரவில்லை. ஆனால் இன்று அது நிதார்சனமாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பிரான்சிஸ் அடிகளார்  பல விடயங்களை மனம் விட்டு பேசினார். உரையாடல் முடிவில் அவரை எங்களோடு வந்து இருக்கும்படி கேட்டபோது, அவர்  இரண்டு காலும் ஊனமுற்ற அந்தப் பெண்ணைக் காட்டி “நான் உங்களுடன் வர ஆயத்தம், ஆனால் இந்தப் பெண்ணையும் கொண்டு வந்து உங்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை” என்று உருக்கமாகவும் நிதானமாகவும் கூறிய வார்த்தைகளால் நாம் அவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல விரும்பவில்லை. இவர்  சுட்டிக்காட்டிய அந்தப் பெண் இவரிடம் ஆங்கிலம் பயின்ற ஒரு மாணவி, அந்தப் பெண்ணைப் பார்த்த போது, அவளுக்கு முன்னாலே நீலநிற பேசின் ஒன்றிற்குள்ளே இரண்டு பின்னங்கால்களையயும் இழந்த அவரின் செல்லப் பிராணியான பூனைக்குட்டி காணப்பட்டது.



அடிகளார்  கிளிநொச்சி அம்பாள் குளம் என்ற இடத்தில் பல வருடங்களாக இருந்து ஆன்மீக, சமூகப்பணி ஆற்றிக் கொண்டு இருந்தவர். தாய் நாட்டின் மீதும் மக்களின் விடுதலை மீதும் அதீத ஆர்வம் கொண்ட இவர்  யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார்  கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி ஓய்யு  பெற்ற பின்னர்  தழிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் தன்னுடைய கல்வித்துறை அனுபவத்தாலும் போர்க்கால சமூக கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட்டிருந்த பல கல்விசார்ந்த துறைகளில் தலைமைப் பதவிகளை வகித்தவார். வன்னியில் தமிழ் இளையோரினது ஆங்கில மொழிப் புலமைக்கு வித்திட்டு, நீண்ட நாள் கனவாகிய ஆங்கில மொழிக் கல்லூரியை 2004ம் ஆண்டு கிளிநொச்சியில் பிறப்பெடுக்கச் செய்து தனது ஆங்கில மொழிப் புலமையினாலும் நீண்ட கால கல்வித்துறை அனுபவத்தினாலும் இக்கல்லூரியை திறம்பட இயக்கி ஆங்கில மொழி பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.
கடின உழைப்பும், விடாமுயற்சியும் கொண்ட இவர் மக்களின் வாழ்வியலின் துன்பமான வரலாற்றுத் தடங்களுடன் தன்னை இரண்டற இணைத்துக் கொண்டார். இடம்பெயர்வு  என்ற போரியல் சுழற்சிக்குள்ளே தர்மபுரம், வள்ளிபுனம், உடையார்கட்டு, இரணைப்பாலை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் என பல்வேறு குறிச்சிகளை தாண்டி போரின் இறுதிக்காலம் வரை துன்பப்படும் மக்களோடு இருந்தார். எழ்மையை வாழ்வாக்கியவர், உதவி என்று தேடிச் செல்வோரை அன்போடு அரவணைத்து மனம் கோணாமல் உதவி செய்தார். இவர்  வள்ளிபுனம் பிரதேசத்தில் இருந்த போது குருத்துவத்தின் 50வது வருட நிறைவை உடையார்கட்டு தூய யூதாததேயு ஆலயத்தில் 2008 மார்கழி 21ம் திகதி ஏனைய குருக்களோடும் இறைமக்களோடும் சேர்ந்து மிகவும் எளிமையான முறையிலே கொண்டாடினார். 50 வருட குருத்துவ பயணத்தில் இறைவனின் துணையோடு வரலாற்றில் பல சாதனைகளை இவர்  புரிந்திருக்கிறார்.
இடப்பெயர்வின் தாக்கம் இவரின் உடலிலும் பலவிதமான நோய்களை ஏற்படுத்தத் தொடங்கியது. உடல் பலவீனம், கண்பார்வை குறைதல் போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்தவராக, தனது இயலாமையிலும் உறுதியாக பல பணிகளைபுரிந்தவர். எந்த வேளையிலும் யாருக்கும் இவர்  சுமையாக இருக்க விரும்பாதவர். இவர்  அகோர எறிகணைத்தாக்குதல்கள் பலவற்றுக்குள் சிக்குண்டு இறை துணையால் பாதுகாக்கப்பட்டார். ஒருமுறை உடையார்கட்டு ஆலயத்தில் நாங்கள் ஒன்றாக இருந்தபோது எறிகணைத் தாக்குதலுக்குள் எல்லோரும் சிக்குண்டு இரவு வேளையில் சிதறி ஓடும் போது, கைத்தாங்கலாக இவரை அழைத்துச் சென்றது, இன்னும் எனது நினைவில் உள்ளது. பல தடவைகளில் உந்துருளியில் இவரை அழைத்துக் கொண்டு நீண்ட பயணங்கள் செய்யும் போது, தான் கடந்து நடந்து வந்த வாழ்வியல் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்வார். இவர்  எமது கடந்த கால வரலாற்றை நன்கு அறிந்திருந்த இறைபணியாளர்  என்பதைப் புரிந்து கொண்டேன்.
இவரது கண்களில் ஒன்று சத்திர சிகிச்சை செய்யப்பட்டு குணப்படுத்தப்பட வேண்டிய கட்டாய தேவை இக்காலப்பகுதியில் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேறினால் தான் மீண்டும் திரும்பி வரமுடியாது போனால், தனது பணிகள் பாதிப்படையும் என்று நினைத்தவராக, ஆரம்பத்தில் மறுத்தாலும் காலப் போக்கில் இவரது பார்வை மேலும் மேலும் குன்றிப்போக பார்வையை இழக்க நேரிடும் அபாயத்தை உணர்ந்தவராக அங்கிருந்து வெளியேற விரும்பிய போது அதற்கு ஏதுவான கால சூழ்நிலைகள் இவரின் பயணத்திற்கு சாதகமாக அமையவில்லை. இவரை அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்றுவதற்கு நாங்கள் பல முயற்சிகள் எடுத்த போதும் எதுவும் பயனளிக்கவில்லை. இருந்தாலும் எல்லாவற்றையும் நல்மனதோடு ஏற்றுக் கொண்டார்.
2009 மேஇ 13ம் திகதி அவரை விட்டு நான் பிரியும் போது இனம்புரியாத பயம் ஒன்று எனது மனதில் இருந்தது. தனித்து விடப்படுகிறாரே என்று எனது உள்மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. அந்த வேளையில் “கடவுளுக்குச் சித்தமானால் மீண்டும் ஒரு முறை சந்திப்போம்”, என்ற அவரது வாயிலிருந்து வந்த வார்த்தைகள் என்னை சற்று ஆறுதல்ப்படுத்தியது. அந்த இடத்திலிருந்து  அன்றைய தினமே வெளியேறி இன்னுமொரு இடத்தில் பாதுகாப்புத் தேடிய இவர்  மே மாதம் 17ம் திகதி வட்டுவாகல் பாலத்தை தாண்டி பல இலட்சக்கணக்கான மக்களோடு இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் சென்றார். களைப்பு, சோர்வு, அவரது உடலின் இசைவாக்கத்திலே தளர்ச்சியை ஏற்படுத்த ஒரு மரநிழலின் கீழ் தன்னுடன் இருந்த தனது பணியாளர்களோடு இளைப்பாறிக் கொண்டிருந்தர். பலர்  அவரை அடையாளம் கண்டு தங்களின் சோகங்களை அவரோடு பகிர்ந்து கொண்டனர். இவரின் பிரசன்னத்தை அங்கு கண்ட அரசியல்த்துறையைச் சேர்ந்த சிலர் மே 18 காலை வேளையில் இவரை அணுகிச் சென்று தங்களை அடையாளப்படுத்தி, இராணுவத்தினரிடம் சரணடைய தமக்கு உதவிபுரியும்படி கேட்டுக் கொண்டார்கள். அடிகளாரின் ஆங்கில மொழிப்புலமை சரணடைதலுக்குரிய ஒரு சுமூகமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதையும், அவர்  ஒரு குருவானவர்  என்பதால் இராணுவத்தினர்  இவருக்கு மதிப்பளிப்பார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்கள். தாராள உள்ளத்தோடு மனம் கோணாமல் உதவி செய்யும் மனம் படைத்த இவர், அதற்கு இசைந்து அதனை செயற்படுத்துவதற்கு, இராணுவ உயர்  அதிகாரிகளை தொடர்பு கொண்டார். அவர்களும் சரணடைதலுக்கு சம்மதித்து சரணடைபவர்களின் பெயர் பட்டியலை ஆயத்தம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆரம்பத்தில் ஒரு சிலர்  மட்டுமே தங்களை அடையாளப்படுத்தினாலும், அடிகளாரின் அந்த முயற்சியை அறிந்த இன்னும் பலர்  அங்கு ஒன்று கூடி குடும்பசகிதம் தங்களின் பெயர் விபரங்களை அப்பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள். ஒரு சிலருடன் ஆரம்பித்து இப்பெயர்பட்டியல் மிகவும் நீண்ட பட்டியலாக மாறியது. இறுதியில் அந்தப் பெயர்பட்டியலை பெற்றுக் கொண்ட அதிகாரி அவர்களுக்கென விசேட பேருந்து வண்டிகளை ஒழுங்கு செய்து அவற்றில் ஏற்றிய பின்னர்  அடிகளாரையும் அந்தப் போராளிகளோடு ஏற்றிச் சென்றார்கள். இந்த சம்பவங்களை பலர்  கண்டுள்ளார்கள். அடிகளாரின் இருப்பு இப்போது கேள்விக்குறியாக மாறி விட்டது. அடிகளாரோடு அந்த பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டது.



இவ் அருட்பணியாளர் முள்ளிவாய்க்கால் என்ற, உலகப் பந்தின் ஒரு சிறு புள்ளியில் மக்களின் துன்பியலோடு தன் இருப்பை கரைத்துக் கொண்டவர். இறுதிக் காலத்திலும் இறைபிரசன்னத்தை மக்களுக்கு கொடுத்தவர். காற்றோடும், கடலோடும், மண்ணோடும் கரைந்து போன பல்லாயிரக் கணக்கான மனிதர்களோடு தன் வாழ்வையும் இணைத்துக் கொண்டவர். வரலாற்றில் உம் தடங்களை என்றும் நாம் நினைவில் கொள்வோம்.



                 
 ஆக்கம் : அருட்பணி. அன்டன்  ஸ்ரிபன்