Thursday, 30 April 2020

இலங்கையில் ஆபிரிக்க வம்சாவளியினர் ? African descendants in Sri Lanka ?

இலங்கையிலுள்ள தேசிய இனங்கள் எத்தனை என்கிற கேள்விக்கு பொதுவாக தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் வேடர்கள் என்ற ஐந்து இனக்குழுக்களையே இலங்கையர்களாகக் குறிப்பிடுவார்கள். ஆனால் இந்தச் சிறிய தீவில், ஒட்டுமொத்தமாக 24 இன மக்கள் வாழ்வது  நாம் அறியாத ஒன்றாகும். விஜயன் வருகைக்கு முதலிருந்தே பல்வேறு இனக்குழுக்கள் இலங்கையில் வாழ்ந்துவந்தது மட்டுமின்றி இந்தியப் படையெடுப்புகள் , வெளிநாட்டு வர்த்தகங்கள் மற்றும் காலனித்துவ ஆட்சியின் தாக்கம் போன்றன, இந்தப் பன்முக இனப்பரம்பலை விரிவாக்கிய காரணிகளாகும்.

ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்வதற்காக கணிசமான தென்னிந்திய மக்கள் மலையகத்தில் வேலை செய்தனர்.ஆனாலும், முதன்முதலாக இலங்கையில் காலனித்துவ ஆட்சிமுறையை ஸ்தாபித்த போர்த்துக்கீசர், தமது ஆட்சிப்பரப்பில் இருந்த கறுவாத் தோட்டங்களில் பணி புரிவதற்காக , தமது காலனித்துவ நாடான ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டிலிருந்து பல ஆபிரிக்கக் குடிமக்களை இலங்கையின் மேற்குப் பாகத்தில் குடியமர்த்தினர்.மேலும் இலங்கையில் போர்த்துக்கீசப் படைப்பிரிவில் ஆபிரிக்க இனத்தவரின் பங்கானது மிகவும் முக்கியமானது.இருப்பினும், கி.பி.1658ல் போர்த்துக்கீசர் இலங்கையை விட்டு ஒல்லாந்தரால் கலைக்கப்பட்ட பின்னர் இந்த ஆபிரிக்க வம்சாவளி மக்கள் இலங்கையின் சுதேசிய மக்களோடும் கலக்கத் தொடங்கினர்.

இந்த ஆபிரிக்க வாரிசுகளை Kaffir (தமிழில் காப்பிலி) என்னும் சொல்லாலேயே பலரும் அடையாளப்படுத்துவர்.இன்றைக்கு இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த kaffir மக்களின் எண்ணிக்கையானது, ஏறத்தாழ 1000 மட்டுமே ஆகும்.இன்றைய புத்தளம் மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் வாழும் இவர்கள் தமது தாய் மொழியினை மறந்தாலும்,  தமது தனித்துவமான கலையான "kaffiringna" எனும் நடனத்தையும் இசையையும் தொடர்ந்து பேணியவண்ணமே உள்ளனர்.இவர்கள் குறிப்பாக புத்தளத்தின் "சிரம்படிய" எனும் கிராமத்தில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.


இக்னேசியா என்னும் Kaffir இன மூதாட்டி
(இவர் தமிழ் மொழியினையே பேசுகிறார்)


புத்தளத்தில் வாழும் Kaffir இன மக்கள் பெரும்பாலும் தமிழன் மொழி மற்றும் சிங்கள மொழியினைப் பேசிவருவதோடு ரோமன் கத்தோலிக்க சமயத்தையே தொடர்ந்தும் பின்பற்றுகிறார்கள்.சொற்ப எண்ணிக்கையிலானவர்களே போர்த்துகீசியப் பறங்கி மொழியினைப் பயன்படுத்துகிறார்கள்.இவர்கள் இன்று  தமிழர்கள் மற்றும் சிங்கள இனத்தவருடன் திருமணத்தொடர்பினை ஏற்படுத்திவருவதால், இவர்களுக்குரிய தனித்துவமான பல அம்சங்கள் அருகி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. 


Kaffir பெண்கள் 


Kaffir இனத்தவர் பற்றிய  இலங்கை அரசாங்கத்தின் விழிப்புணர்வானது கடந்த பத்து ஆண்டுகளுக்கு உள்ளே தான் உருவாகியது எனலாம்.இவர்களின் தனித்துவமான கலாசாரத்தை காக்கவேண்டியதன் கடப்பாட்டினை உணர்ந்த கலாசாரம் அமைச்சானது ,  இவர்களை ஊக்குவிப்பதற்காக இவர்களுக்குரிய மேடையினை அவ்வப்பொழுது வழங்கியே வருகின்றது.


தனித்துவமான Kaffiringna இசை மேடையேற்படல் 



கிட்டத்தட்ட 450 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் வசித்து வரும் இந்த ஆபிரிக்க வம்சாவளி மக்கள்,  தமது வரலாற்றினை வாய்மொழி மூலமாகவே பேணி வந்துள்ளனர்.போர்த்துக்கீச ஆட்சியாளர்களால் இவர்கள் இலங்கைக்குப் படைவீரர்களாகக் கொண்டுவரப்படத்தோடு ,  கண்டி மன்னனுக்கு எதிரான போர்களிலும் இவர்கள் பங்குகொண்டுள்ளார். குறிப்பாக பலனை போர், றன்தெனிகலைப் போர் மற்றும் தந்துரே போர் போன்ற போர்களில் போர்த்துகீசப் படைப்பிரிவில் இவர்கள் இருந்ததற்கான வரலாறுப் பதிவுகள் இன்னும் உள்ளன.மேலும் கண்டி மன்னர்கள் தமது கறுவாத் தோட்டங்களில் பணிபுரிவதற்கு இவர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.



பிரித்தானியர் காலத்தில் Kaffir தொழிலாளர்  



Kaffir இனத்துத் தம்பதிகள் 



புத்தளத்தில் வாழும் ஒரு kaffir குடும்பம் 




Kaffiringna இசை முறை 




என்னதான் இவர்கள் ஆப்பிரிக்க வம்சமாக இருந்தாலும் ,  இவர்கள் இன்று இலங்கையின் குடிமக்களே ஆவர். பெரும்பான்மை சிறுபான்மை என்ன மோதிக்கொள்ளும் நாங்கள் , இலங்கைத் தீவில் தமக்கென ஒரு முகவரியைக் கூட தேடமுடியாத இவர்களைப் போன்ற மிகவும் மறக்கப்பட்ட சமூகங்களை பற்றி சரியான புரிதல்களைப் பெறுவோமேயானால் , இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்தையும், ஆரோக்கியமான இலங்கையர்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.




Wednesday, 29 April 2020

மழுங்கடிக்கப்படுகிறதா மாணவர் சமுதாயம் ? மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பெற்றோர்களின் தவறான புரிதல்களும் || தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையும்




அண்மைக்காலமாக வடக்கு மாகாணம் கல்விநிலையில் தொடர்ந்தும் பின்தங்கி நிற்பது நாம் அனைவரும் அறிந்ததே. புத்தகக் கல்விக்கு அப்பால், ஒவ்வொரு மாணவனினதும் ஆளுமை விருத்தி மேம்பாடே முக்கியமானதாகும். மாணவர்கள் கல்விநிலையில் மாத்திரமன்றி வாழ்க்கைத்தேர்ச்சி மற்றும் தலைமைத்துவ ஆளுமை விருத்தியிலும் பின்தங்கியிருப்பத்து கவலைக்குரிய விடயமாகும். இதற்கு முக்கிய காரணியாக இருப்பது ,  மாணவர்களை இணைபாடவிதான செயற்பாடுகளை மேற்கொள்ளவதற்கு ஊக்கம் கொடுக்காமை காணப்படுகின்றது.

புத்தகக் கல்வியினை விட ,  மாணவர்களின் சுய ஆளுமை மேம்பாடு, தலைமைத்துவ விருத்தி, சமூக உறவு மற்றும் தொடர்பாடல்த் திறன் போன்றவையே முக்கியமாக விருத்திசெய்யப்பட வேண்டியவையாகும். புத்தகப் படிப்பானது ஒரு மாணவனைக் குறிப்பிட்ட தூரத்துக்கே கொண்டுசெல்லும். வாழ்க்கைத் தேர்ச்சித் திறன்களின் மூலமே ஒரு மாணவன் சமூகத்திற்கு மிகவும் பயனுடையவனாக மாற்றமடைவான்.

உயர்தரத்தில் தனக்கு விரும்பிய பாடப்பரப்பினைத் தானே சரியாத் தெரிவுசெய்து படிப்பதற்குரிய சுதந்திரத்தை அநேகமான பெற்றோர்கள் வழங்குவதில்லை. அதுமாத்திரமன்றி, ஒரு மாணவன் உயர்தரத்தில் கல்விகற்கத் தொடங்கும்போது , பாடசாலையின் இணைவிதானச் செயற்பாடுகளிலிருந்து முழுமையாகத் தன்னை ஒதுக்கிக்கொள்ளும் போக்கும் அநேகமான மாணவர்களின் காணப்படுகின்றது. மேலும் தொடர்ச்சியாக நடைபெறும் தனியார் கல்விநிலையங்களால் ,  சமூகத்துடன் தனது உறவை வளர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களை மாணவன் இழக்கும் நிலை காணப்படுகின்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கும் தனியார் கல்விநிலையங்களில் குறிப்பிட்ட தொகை மாணவர்களே சித்திபெறுவது நாம் அறிந்ததே.



பெற்றோர்களில் பலர் ,  தமது பிள்ளைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதோடும் கல்விநிலையக் கட்டணங்களை செலுத்துவதோடு மட்டுமே நின்றுவிடுகின்றனர். பெற்றோரின் எல்லைகடந்த அரவணைப்பும் ,  ஒரு மாணவனின் ஆளுமை வளர்ச்சியில் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடிய காரணியாகும்.

இன்றைய மாணவர் சமுதாயத்தில் உயர்தர மாணவர்கள் தமது பாடசாலையை அன்றி தனியார் கல்விநிலையங்களையே முழுமையாக நம்பியிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தனியார் கல்விநிலையங்களின் வருகையினால் , சமூக உறவினை வளர்ப்பதற்கும் , தனக்குள் மறைந்திருக்கும் தனித்துவமான திறமைகளை இனம்கண்டுகொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. தனியார் கல்விநிலையங்களில் கல்விகற்கும் மாணவர்களில் எத்தனை வீதமான மாணவர்கள் உயர்நிலைச் சித்தியினை அடைகின்றனர் என்பது தான் இங்கு கேள்வியாக உள்ளது. கிழமை நாட்களில் மாத்திரமல்லாமல் வாரவிடுமுறை நாட்களிலும் கூட தனியார் கல்விநிலையங்கள் தொடர்ந்தும் இயங்குவதால் ,  மாணவர்கள் உளவியல் ரீதியாக மனஉளைச்சலுக்கு உள்ளாவதை எவருமே பொருட்படுத்துவதில்லை.

இலங்கையின் கல்விமுறையானது தொழிற்கல்வியையே மையப்படுத்தியது ஆகும். இது பலவழிகளில் ஒரு தனிநபரின் ஆளுமையினை மழுங்கடிக்கும் ஒன்றாகும். ஒரு மாணவன் தனது ஆளுமையினை விருத்திசெய்வதில் எவ்வளவு பாடுபடுகிறானோ,அளவிற்கு அவனது தலைமைத்துவப் பண்பும் சுய மதிப்பீடும் விருத்தி பெறும். பல்கலைக்கழகத்தை விட்டால் வேறு வாழ்க்கை இல்லை என்னும் தவறான கண்ணோட்டமும் எம்மவர் மத்தியிலிருந்து களையப்பட வேண்டும்.மேலும் மாணவனின் சுய ஆளுமையை விருத்தி செய்து, அவரின் சுய மதிப்பீட்டை உயர்த்தி, அவருள் மறைந்திருக்கும் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர இச் சமூகம் முயற்சி செய்யும் பட்ச்சத்தில் மாணவன் தனக்கு ஏற்ற பாதையில் தனது எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்



Tuesday, 28 April 2020

தென்னமெரிக்காவில் ஒரு தமிழ்ப் பிரதமர் ? | A Tamil Prime Minister in South America ?

காலனித்துவ ஆட்சியின்போது பெரும்தொகையான தமிழர்கள் உலகத்தின் பெரும்பாலான பாகங்களுக்குக் குடிபெயர்ந்தது , எமக்குத் தெரிந்த விடயமே. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் மற்றும் பிஜி  போன்ற நாடுகளில் கணிசமான அளவு தமிழ் பேசும் வம்சாவளி மக்கள் வாழ்ந்துவருவது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக காரேபியான் தீவுகள் மற்றும் தென்னமெரிக்க நாடுகளுக்கு டச்சுக்காரர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களால் கொண்டுசெல்லப்பட்ட  தமிழர்கள் பற்றி நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. லத்தின் அமெரிக்கா நாடுகளான சூரினாம் , பிரிட்டிஷ் கயானா மற்றும் பிரெஞ்சுக் கயானா போன்ற நாடுகளில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்துத் 90 ஆயிரம் இந்திய வம்சாவளி மக்கள் வாழுகின்றனர். 2015ம் ஆண்டுக்குக்  கணக்கெடுப்பின் படி கஜானா நாட்டின் மொத்த சனத்தொகையில்  கிட்டத்தட்ட  35 வீதமான மக்கள் இந்து மதத்தையே பின்பற்றுகின்றனர். இவர்களில் கணிசமானோர் தமிழ் வம்சாவளியினரேயாவர்.

நாம் இதுவரை கேள்விப்பட்டிராத நாடுகளில் எம்மின வம்சாவளியில் வந்தவர்கள் தலைமைத்துவப் பொறுப்பில் இருப்பதென்பது , எம் இனத்தின் பெருமையைப் பறைசாற்றும் ஒன்றாகும்.


கயானா நாட்டின் அமைவிடம் 
கயானாத் தமிழ் வம்சாவழிப் பெண்கள்
1860 களில் கரும்புத் தோட்டங்களில் வேலை புரிவதற்காக ,  பிரித்தானிய அரசாங்கம் பெரும் தொகையான ஹிந்துஸ்தானிகள் மற்றும் தமிழர்களை கயானா நாட்டிற்கு அழைத்துச் சென்றது. சனத்தொகை குறைவான குடியேற்ற நாடாக கயானா காணப்பட்டதால் , இந்திய வம்சாவளியினரும் இந்து சமயமும் கஜானா நாட்டில் செல்வாக்குச் செலுத்தின. 
இன்றைய நவீன கயானா நாட்டின் அரசாங்கத்தில் 8வது  பிரதமராக பதவியில் இருப்பவர் தமிழரான "மோசஸ் வீராசாமி நாகமுத்து"(Moses Veerasammy  Nagamootoo)என்பவரே. 2015 தொடக்கம் இன்றுவரை அதே பதவியைத் தொடர்கிறார். 
கௌரவ . மோசஸ் வீரசாமி நாகமுத்து 
நவம்பர் 30 , 1949ல் , கஜானா நாட்டின் Berbice மாவட்டத்தின் Whim எனும் சிறிய கிராமத்தில் பிறந்த இவர் தனது பாடசாலைக் கல்வியின் பின்னர் ,  ஒரு ஆசிரியராகப் பணிபுரிந்து ,  பின்னர் ஊடகவியலாளரானார்.தனது உயர் கல்வியை முடித்த பின்னர் , ' De Edwards  /  Rosignal Highschool ' என்ற உயர்நிலை கல்வி சாலைகளை 1960களில் நிறுவினார்.சட்டத்தரணியாகவும் பணியாற்றிய இவர் ,  பொருளியல் மற்றும் பிரித்தானிய அரசியலமைப்பு போன்ற பாடங்களையும் மிகுந்த ஊக்கத்தோடு கற்பித்து வந்தார்.இவருடைய மாணவர்களில் ஒருவர் ,  அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சிறந்த பேராசிரியராகத் திகழ்வது ஒரு சிறப்பம்சம் ஆகும்.

தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நாகமுத்து 
1992ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று , முதன்முதலாகப் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த இவர் , தகவல்த் தொடர்பாடல் அமைச்சராகவும் உள்நாடு விவகார அமைச்சராகவும் பதவி வகித்தார்.
நாகமுத்து வெளியிட்ட புத்தகம். 
(மீன்பிடிக் கிராமத்தில் ஒரு தமிழன் )
2000ம் ஆண்டில் தனது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய இவர் , 2011ம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்பட்டார்.
2008ம் ஆண்டில் நடந்த மக்கள் முற்போக்குக் கட்சியின் மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாகமுத்து ,  2011ல்  தனது கட்சியில் இருந்து விலகி , எதிரணிக் கூட்டணியுடன் இணைந்து , கஜானா தேசத்தை புதிய பாதையில் இட்டுச் செல்ல பாடுபட்டார்.மே மாதம் 2015ல் நடைபெற்ற தேர்தலில் எதிரணி பாரிய வெற்றியைப் பெற்றுக்கொண்டதன் விளைவாக நாகமுத்து பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றார்.
உலகின் முதலாவது தமிழ்ப் பிரதமரான நாகமுத்துவிற்கு தமிழ்நாட்டில் கௌரவ கலாநிதிப் பட்டம் 2016ல் வழங்கப்பட்டது 
எவருமே பெரிதாக அறிந்திராத கயானா நாட்டில் மீன்பிடிக் கிராமம் ஒன்றில் பிறந்த தமிழன் ஒருவன் அந்த நாட்டு அரசியலில் முக்கிய புள்ளியாக இருப்பதென்பது மாபெரும் சாதனையே ஆகும்.அது மாத்திரமில்லாமல் உலகின் முதலாவது தமிழ்ப் பிரதமர் என்ற பெருமையையும் நாகமுத்துப் பெறுகிறார்.


உத்தியோகபூர்வ இந்தியா விஜயம் 
இந்தச் வீரத் தமிழனின் முயற்சிக்குக் கிடைத்த கௌரவத்தையும் பெருமையையும் எம்மவர் மத்தியில் பகிர்வதன் மூலம் நாம் எம் இனத்தின் பிற்போக்கான பழைமைவாத சிந்தனைகளில் இருந்து விடுபட்டு ,  நாமும் முன்னேறி,  பிற மக்களையும் முன்னேற்றுவோம்.